பிரமாண்ட உருவம், ஆனால் பரமசாது ... கொம்புதிருக்கையை படம் பிடித்த புதுச்சேரி நீச்சல் வீரர்!
புதுச்சேரியில் ஆழ் கடலில் தென்பட்ட பிரமாண்ட கொம்புத்திருக்கை மீன்களை ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் என்பவர் வீடியோவாக எடுத்துள்ளார்.
மீன் இனங்களில் சற்று வித்தியாசமானது திருக்கை மீன்கள். வழக்கமாக மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பவை, ஆனால், திருக்கை மீன்கள் குட்டிகளை ஈன்றெடுக்கும். செதில்கள் இல்லாத திருக்கை மீன்கள் தட்டை வடிவமான தன் உடலில் அகலமாக விரிந்த இறக்கை போன்ற பாகத்தை கொண்டு கடலில் நீந்தி செல்லும் தன்மையுடையது. திருக்கை மீன் மருத்துவ குணம் நிறைந்தது மற்றும் முள் இல்லாதது. அவ்வப்போது, பிரமாண்டமான திருக்கை மீன்கள் மீனவர்களில் வலையில் சிக்குவதும் உண்டு. சில திருக்கை மீன்கள் 1,500 கிலோ எடை வரை கூட வளரும் என்று சொல்லப்படுகிறது. திருக்கை மீன்களின் வால்களை பண்டைய காலத்தில் சவுக்கு போன்ற ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்கு திருக்ரைக வார் என்று பெயர். பொதுவாக, திருக்கை மீன்கள் பிரமாண்டமாக வளர்ந்தாலும் மிக சாதுவானவை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய தனித்தன்மை கொண்ட திருக்கை மீன்கள் ஆழ் கடலில் மட்டுமே தென்படுபவை. சமீபத்தில் ஆழ்கடலில் நீச்சல் பயிற்சிக்கு சென்ற புதுச்சேரியை சேர்ந்த நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த் மற்றும் அவரின் குழுவினர் கடலுக்குள் சென்று கொண்டிருந்த கொம்புதிருக்கை மீன்களை கண்டனர். புதுச்சேரியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இந்த திருக்கை மீன்கள் பயணித்து கொண்டிருந்தன. ஆழ் கடலில் திருக்கை மீன்கள் சென்று கொண்டிருந்த காட்சியை அழகாக படம் பிடித்தனர். இந்த மீன்கள் ஒவ்வொன்றும் 1,000 கிலோ எடை கொண்டதாக இருந்தாகவும் புதுச்சேரி கடற்கரையில் திருக்கை மீன்கள் முதன்முதலாக தென்பட்டதாகவும் அரவிந்த் கூறியுள்ளார்.
Comments