டெல்லியில் விவசாயிகள் போராட்டம்..! விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு...

0 2730
டெல்லியில் விவசாயிகள் போராட்டம்..! விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தைக்கு அழைப்பு...

வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி, டெல்லி அருகே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

பஞ்சாப் , ஹரியானா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லியை நோக்கி அணி வகுத்துள்ள பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் 6வது நாளாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வீதிகளில் உறங்கி மத்திய அரசு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹரியானா எல்லையில் போலீசார் அவர்களைத் தடியடி நடத்தியும் தண்ணீர்ப் பீய்ச்சியும் விரட்டியதைத் தாண்டி விவசாயிகளின் பேரணி டெல்லியின் சிங்கு எல்லையை அடைந்துள்ளது.

சாலையோரம் தங்கிய விவசாயிகள் நேற்று குருநானக் ஜெயந்தியையும் கார்த்திகை தீபத் திருவிழாவையும் விளக்குகளை ஏற்றி வைத்துக் கொண்டாடினார்கள்.

டெல்லிக்கு வரும் 5 பாதைகளையும் மூடப்போவதாக எச்சரித்த விவசாயிகள் சாலைகளில் டிராக்டர்கள், வேன்கள், பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ளதால் டெல்லி மற்றும் அதன் வெளிப்புற சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக் கொண்டு வர மத்திய அமைச்சர்கள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அமித்ஷா, ராஜ்நாத்சிங், தோமர் உள்ளிட்ட அமைச்சர்கள் பாஜக தலைவர் ஜேபி.நட்டாவுடன் நேற்று முன்தினம் பேச்சு நடத்தினர். நேற்று இரண்டாவது நாளாக இதுபற்றி விவாதித்த நிலையில், விவசாயிகள் பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைக்கு குழு ஒன்றை நியமித்துள்ளனர்.

இதனிடையே விவசாயிகள் கொரோனா மற்றும் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ள மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், டெல்லி விக்யான் பவனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

32 விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மத்திய அமைச்சரின் அழைப்பை ஏற்பது குறித்து இன்று தங்களுக்குள் பேசி முடிவெடுக்க இருப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில் வேளாண் மசோதாக்கள் குறித்து விவாதிக்க தனி குழு அமைக்கலாம் என்று அரசு தரப்பில் முன்மொழியப்பட்டது. அந்த குழுவில் விவசாய சங்க பிரதிநிதிகள் 4 அல்லது 5 பேர், வேளாண் துறை நிபுணர்கள், மத்திய அரசின் பிரதிநிதிகளை இடம்பெற செய்யலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்ட வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments