காரில் சென்றவருக்கு ஹெல்மெட் எதற்கு? அபராதம் விதித்த கன்னியாகுமரி காவல்துறை

0 2544

காரில் சென்றவரை ஹெல்மெட் அணியவில்லை என கூறி அபராதம் விதித்த கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையிடம், ஒரு லட்சம் நஷ்ட ஈடு கேட்டு பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் டேவிட் கிராண்ட். இவரது மொபைல் எண்ணுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 7ந் தேதி கன்னியாகுமரி மாவட்ட காவல் துறையில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.

அவரது நான்கு சக்கர வாகனத்தில் சென்ற போது தலைக்கவசம் அணியவில்லை என்றும், அதற்கு ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் குறுஞ்செய்தி கிடைத்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆபிரகாம், நான்கு சக்கர வாகனத்திற்கு ஏன் தலைக்கவசம் அணிய வேண்டும் என குழம்பியுள்ளார்.

உடனடியாக அது குறித்து தகலை ஆன்லைனில் பரிசோதித்த போது, அதில் வாகனம் ஓட்டுகையில் ஹெல்மெட் பயன்படுத்தவில்லை என பிரிவு 177 ன் கீழ் ரூபாய் 100 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

போலீசார் அபராதம் விதித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்ட வாகன சோதனை சீட்டிலேயே, வாகனத்தின் வகை, கார் என குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு மேலும் அதிர்ந்து போனார்.

இந்நிலையில், அபராதம் விதிக்கப்பட்டதற்க்கு சம்பந்தப்பட்ட துறையினரிடம் தொலைபேசி மூலம் ஆபிரகாம் விசாரித்துள்ளார். ஆனால், காவல்துறை சார்பில் சரியான பதில் அவருக்கு அளிக்கப்படவில்லை என தெரிகிறது, மேலும் அபராதத்தை உடனடியாக செலுத்தவில்லை என்றால் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் ஆன்லைன் மூலமாக 100 ரூபாய் அபராதத்தையும் செலுத்தி அதற்கான ரசீதை பெற்று, இது தொடர்பாக ஆபிரகாம் தன்னிடம் முறைகேடாக வசூலித்த நூறு ரூபாயையும், நஷ்ட ஈடாக ஒரு லட்ச ரூபாயையும் வழங்க வேண்டும் என நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இவ்வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதி அடுத்த மாதம் 29ஆம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என அறிவித்துள்ளார்.

மேலும் அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளர், கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ஆகியோருக்கு எதிராக ஆபிரகாம் வழக்கு தொடர்ந்துள்ளார்

இதன் மூலம் வாகன சோதனை நடத்த படாமலேயே இதுபோன்று ஏதாவது ஒரு வாகன எண்னை வைத்து அபராதம் விதிக்கப்பட்டு குறுஞ்செய்தி மூலமாக தகவல் அனுப்பப்படுகிறதோ என்ற சந்தேகம் எழும்பி உள்ளதோடு, வாகன சோதனை என்ற பெயரில் போலீசார் முறைகேட்டில் ஈடுபடுகிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments