'எங்களுக்கு சொந்தமான இடத்தில் நீர் தேக்கம் தொட்டி! '- 100 அடி உயரத்தில் போராட்டம் நடத்திய குடும்பம்
நெல்லை அருகே தனக்கு சொந்தமான இடத்தில் மாநராட்சி நிர்வாகம் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டியதற்காக இழப்பீடு தர வேண்டுமென்று கூறி குடும்பத்துடன் ஒருவர் நீர்தேக்கத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
நெல்லை மேலப்பாளையம் அருகேயுள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான நிலம் சேவியர் காலனியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த இடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. தனக்கு சொந்தமான இடத்தில் நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதாக கூறி கணேசன் உரிய இழப்பீடு கேட்டு வருகிறார் . மாநகராட்சி நிர்வாகம் அவரின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. நீதிமன்றத்திலும் கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார் .
இதற்கிடையே ஆகஸ்ட் மாதம் 15 ம் தேதி காலை 100 அடி உயரமுள்ள அதே நீர்தேக்க தொட்டி மீது ஏறி உரிய இழப்பீடு வழங்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கையில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலையும் வைத்துக்கொண்டு மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார் . அப்போது, போலீஸார் சமாதானப்படுத்தி அவரை கீழே இறக்கினார்.
சில நாள்கள் அமைதியாக இருந்த கணேசன் இன்று தன் மனைவி மற்றும் மகளுடன் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மேல் அமர்ந்து கொண்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டார். தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கணேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பிறகு, கீழே இறங்கி வந்த கணேசன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து விட்டு குடும்பத்தோடு எங்காவது போக போகிறோம் '' என தெரிவித்தார்.
Comments