தென் மாவட்டங்களில் 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும், இதனால் தமிழகத் தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்குக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. புதனன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எனப்படும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று காலை ஐந்தரை மணி நிலவரப்படி கன்னியாகுமரிக்குக் கிழக்கே ஆயிரத்து 150 கிலோமீட்டர் தொலைவில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளது. இது மேற்கு வடமேற்காக நகர்ந்து இன்று மாலைக்குள் ஆழ்ந்த தாழ்வழுத்த மண்டலமாகவும், அதையடுத்த 12 மணி நேரத்தில் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது மேற்கு நோக்கி நகர்ந்து புதன் மாலையில் இலங்கையைக் கடக்கும் என்றும், வியாழன் காலையில் குமரிக்கடல் பகுதியை அடையும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாகத் தமிழகம், புதுச்சேரியில் இன்று ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
நாளை திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரையும், பிற கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
புதனன்று தென்தமிழகம், தென்கேரளப் பகுதிகளில் அதிகனமழை பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதனன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக் கூடும் என்றும், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரையும், டெல்டா மாவட்டங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் கடலோர மாவட்டங்களில் கன மழையும் பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
வியாழனன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் என்பதால் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இன்றே கரை திரும்பும்படியும், அடுத்த மூன்று நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.
இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக வேலூர் மாவட்டம் பொன்னை அணையில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Comments