சாக்கு பையில் மண்ணுளிப் பாம்பு! - மர்ம நபரை தேடும் போலீஸார்
உளுந்தூர்பேட்டை சாக்கில் வைக்கப்பட்டிருந்த மண்ணுளிப் பாம்பை பறிமுதல் செய்த வனத்துறையினர் காட்டில் விட்டனர்.
மண்புழு வகையைச் சேர்ந்த மண்ணுளி பாம்புகளை வீட்டில் வளர்த்தால் வாஸ்து சாஸ்திரப்படி, வீடுகளில் லட்சுமி குடியிருக்கும். இந்தப் பாம்பில் இருந்து தான் எய்ட்ஸ், புற்று நோய் போன்ற நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பாம்பின் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகம் இருப்பதால், புற்று நோய், எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்க பயன்படுத்துவதாக வதந்தி பரப்பப்பட்டது.
5 கிலோவுக்கும் அதிகமான எடை கொண்ட மண்ணுளி பாம்பு என்றால் அதற்கு ரூ. 50 லட்சம் வரை விற்கப்படுவதாக சொல்லப்பட்டது. ஆனால், மண்ணுளிப் பாம்பு பற்றிய தகவல்களில் உண்மையில்லை என்று நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர். ஆனாலும், இப்போதும் மண்ணுளி பாம்பை கடத்தும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் , ஒரு துணிப் பையை எடுத்து வந்து பேருந்து நிலையத்தில் ஒதுக்குப்புறமான இடத்தில் வைத்து விட்டு சென்றுள்ளார். வெகுநேரம் ஆகியும் அந்த பை அதே இடத்தில் இருந்ததால் சந்தேகமடைந்த மக்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்துக்க வந்த போலீஸார், அந்தத் துணிப் பையை பிரித்து பார்த்தபோது உள்ளே மண்ணுளிப் பாம்பு இருந்தது. தொடர்ந்து, வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்களிடத்தில் மண்ணுளி பாம்பு ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட பாம்பு உளுந்தூர்பேட்டை எடைக்கல் காப்புக் காட்டில் விடப்பட்டது.
மண்ணுளி பாம்பை கடத்தி வந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Comments