மூன்று வங்கிகளில் சாமர்த்தியமாக கடன் பெற்று மோசடி செய்த தம்பதியினர்..!

0 76781

ஈரோட்டில் தம்பதிகள் இருவர் தொழிலதிபர்கள் என கூறி மூன்று வங்கிகளில் 48 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர்.

ஈரோட்டைச் சேர்ந்த கார்த்திக், ராதிகா என்ற தம்பதியினர் பல கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை நடத்துவதாக கூரி, தங்களுக்கு வாகன கடன் மற்றும் தனி நபர் கடன் வேண்டுமென்றும், ஈரோட்டிலுள்ள கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் இந்தியன் வங்கி உள்ளிட்ட மூன்று வங்கிகளிள் விண்ணப்பங்களை வழங்கி கடன் பெற்றுள்ளனர்.

இவர்கள் வங்கிகளில் போலி ஆவணங்கள், போலி முகவரிகளைக் கொடுத்து மொத்தம் 48 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு கார்களையும் தனிநபர் கடனையும் பெற்றுக் கொண்டுள்ளனர். கடன்களைப் பெற்ற தம்பதியினர் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை மற்றும் வட்டிகளை கட்ட மிகவும் காலதாமதம் ஆனதால் வங்கி நிர்வாகிகள், அவர்கள் கொடுத்த முகவரிக்குச் சென்ற பொழுதுதான் அது போலியான முகவரி என்பது தெரியவந்துள்ளது.

அதன்பின்னர் அவர்கள் கடன்களுக்காக வழங்கிய ஆவணங்கள் அனைத்தையும் சோதனை செய்ததில் அதுவும் போலியானது என்பது தெரிய வந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த வங்கி நிர்வாகிகள் போலி ஆவணங்கள் மூலம் சாமர்த்தியமாக கடன்களைப் பெற்று வங்கிகளையே ஏமாற்றி தலைமறைவான தம்பதிகள்  குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரையிடம் புகார் அளித்தனர்.


இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரிந்துரையின் பெயரில் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி வழக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வங்கிகளை ஏமாற்றி மோசடி செய்த தம்பதியினர், கோயம்புத்தூரில் தலைமறைவாக இருப்பதாக வந்த தகவலையடுத்து, குற்றப்பிரிவு காவல்துறையினர் விரைந்து சென்று இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.


அவர்களை ஈரோடு அழைத்து வந்து அவர்களிடமிருந்து வங்கிகள் மூலம் பெற்ற இரண்டு புதிய கார்களையும் பறிமுதல் செய்து, அவர்களது வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றையும் சோதனை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments