ராமநாதபுரம் : வானம் பார்த்த பூமியில் குளங்கள் நிறைந்தன... நிலத்தடி நீர் மட்டம் உயரும்!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழங்குளம் 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தில் வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால், நீர்நிலைகள் கண்மாய், ஊரணி, குளங்கள் வறண்டு போய்க் காணப்பட்டன. இதனால் , விவசாயிகள் , கால்நடை வளர்ப்போர் மிகவும் சிரமம் அடைந்தனர். கடந்த ஆண்டு பெய்த மழையினால் ஓரளவுக்கு நீர்நிலைகள் நிரம்பின. ஆனால், இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை ராமநாதபுரம் மாவட்டம் முழுவதுமே பரவலாக பெய்தது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர் நிலைகள் பல ஓரளவுக்கு நிரம்பியுள்ளன.
ராமநாதபுரம் அருகேயுள்ள பழங்குளம் கண்மாய் கடந்த 5 ஆண்டுகளாக வறண்டு காணப்பட்டது . தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் இந்த குளம் முழு கொள்ளளவை எட்டி கடல் போல காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
தற்போது, நீர் நிரம்பிய குளத்தில் சிறுவர்கள் உற்சாக குளியல் போட்டு வருகின்றனர். குளத்துக்கு நீர் வரக்கூடிய வரத்து கால்வாய்களை சரிசெய்து தண்ணீரை வீணாக்காமல் கன்மாயில் விட கிராமத்தினர் உறுதுணையாக இருந்ததே இந்த குளம் நிரம்ப முக்கிய காரணமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் வரத்து கால்வாய்களை சரி செய்து சீரமைத்தால் மட்டுமே மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சனை தீரும். நிலத்தடி நீர் மட்டும் உயரும் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Comments