நிவர் புயலால் அடித்த ஜாக்பாட் ... கரைகளை தொட்டபடி ஓடும் பாலாறு!
நிவர் புயல் கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் நிலத்தடி நீர் மட்டம் நிச்சயமாக உயரும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நிவர் புயல் காரணமாக எதிர்பாராத விதமாக ஆந்திரா மற்றும் வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பொய்தது. இதனால், மூன்று ஆண்டுகளாக வறண்டு கிடந்த பாலாற்றில் கடும் வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் தமிழகத்துக்குள் நுழையும் பாலாறு கிட்டத்தட்ட 222 கிலோ மீட்டர் பயணம் செய்து செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வயலூரில் கடலில் கலக்கிறது. தற்போது , பெய்த கன மழையால் வேலூர் மாவட்டம் பொண்ணை தடுப்பணையில் இருந்து 45 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பாலாற்றில் வெள்ளம் பாய்ந்து வருகிறது. இரு கரைகளையும் தொட்டவாறு செந்நிறத்தில் பாலாற்றில் தண்ணீர் ஓடுவதை கண்டு விவசாயிகள் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாற்றின் கரையோரம் உள்ள 50 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் செவிலிமேடு பகுதியில் உள்ள தரைப்பாலம் முழுமையாக பாலாற்றில் மூழ்கி விட்டது. தரை பாலத்தில் இருந்து மூன்று அடி உயரத்துக்கு வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது . பாலாற்றின் கரையோரப் பகுதிகளை கண்காணிக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவின்பேரில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமையில் வருவாய் துறையினரும், பொதுப்பணித் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்
பாலாற்றை பொறுத்தவரை இருபதிலிருந்து முப்பது அடி வரை நிலத்தடி நீரை உறிஞ்சி வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. இதனால் காஞ்சிபுரம், திருப்பத்தூர் , செங்கல்பட்டு மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Comments