கொரோனா தடுப்பூசி உற்பத்தி மையங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு...
கொரோனா தடுப்பூசி மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான 3 நகரங்களுக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அகமதாபாத் அருகே Zydus Biotech Park சென்று ZyCoV-D தடுப்பூசி குறித்து கேட்டறிந்தார்.
ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்து, மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. இதேபோல, அகமதாபாத்தின் Zydus Cadila நிறுவனத்தின் ZyCoV-D தடுப்பூசி இரண்டாம் கட்ட பரிசோதனையில் உள்ளது.
மூன்று கட்ட பரிசோதனைகளையும் முடித்த ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேக்கா தடுப்பூசியை, புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் இந்தியாவில் விநியோகிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மூன்று நிறுவனங்களுக்கும் பிரதமர் மோடி சென்று, கொரோனா தடுப்பூசி தொடர்பான பணிகளை நேரில் ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, அகமதாபாத் அருகே சைடஸ் பயோடெக் பார்க் சென்ற பிரதமர் மோடி, அங்கு கொரோனா தடுப்பூசி ஆய்வுப் பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட மருத்துவ வல்லுநர்களிடம் கேட்டறிந்தார்.
மருத்துவ கவச உடை அணிந்து, ஆய்வகம் மற்றும் மருந்து தயாரிக்கும் கூடங்களையும் பிரதமர் பார்வையிட்டார்.
புனே மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கும் சென்று, கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் தொடர்பாக பிரதமர் ஆய்வு செய்ய உள்ளார்.
இதனிடையே, அகமதாபாத்தில் சைடஸ் பயோடெக் பார்க் சென்றது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சைடஸ் கெடில்லா நிறுவனம், டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசியை உள்நாட்டிலேயே தயாரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த பணியில் ஈடுபட்டுள்ள குழுவினரை பாராட்டியதாகவும், இந்த ஆராய்ச்சி பயணத்தில் அவர்களுக்கு ஆதரவு தர அரசு துடிப்புடன் செயலாற்றி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் ஆய்வை முடித்துக் கொண்டு, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவன ஆய்வுக் கூடத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, அதனை பார்வையிட்டார்.
ஹைதராபாத் ஹக்கிம்பேட்(Hakimpet) விமானப்படை தளத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில், ஜினோம்வேலி (Genome valley) என்ற பகுதியில், பாரத் பயோடெக் நிறுவனத்தின், தடுப்பூசி தயாரிப்பு ஆய்வுக்கூடம் அமைந்துள்ளது. இங்குதான், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான, ஐசிஎம்ஆர் உடன் இணைந்து, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும், கோவாக்சின், கொரோனா தடுப்பூசி, தயாரிக்கப்பட்டு, பரிசோதனைகளின் அடிப்படையில், தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.
பகற்பொழுதில் ஹைதராபாத் வந்த பிரதமர் நரேந்திர மோடி, சிறிதுநேர ஓய்வுக்குப் பின்னர், பாரத் பயோடெக் ஆய்வு கூடத்திற்கு வந்தார். அங்கு, தடுப்பூசி தயாரிப்பு பணிகள் கூடத்தை பார்வையிட்ட பிரதமர், மருத்துவ அறிவியலாளர்கள், பாரத் பயோடெக் நிறுவன நிர்வாகிகளோடு கலந்துரையாடியதோடு, கோவக்சின் தடுப்பூசி தயாரிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
Comments