வங்கிகளில் லோன் மோசடி... தலைமறைவு கும்பல் கைது
சென்னையில் சினிமா ஷூட்டிங் நடத்தும் பங்களாக்களை வாடகைக்கு எடுத்து, போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் லோன் வாங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வேளச்சேரியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் மேலாளர் தில்லை கோவிந்தன் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் 2 வருடங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார்.
இடைத்தரகர் மூலம் தன்னை அணுகிய ஒரு கும்பல், காரை வாடகைக்கு விடும் தொழில் செய்து பல மடங்கு லாபம் ஈட்டுவதாக கூறி வருமான வரி ஆவணங்களை காண்பித்தனர். தொழிலை பெருக்கம் செய்வதற்காக மேலும் சில கார்கள் வாங்க லோன் தேவைப்படுவதாக கூறிய அவர்கள் அலுவலக பங்களாவையும் காட்டியுள்ளனர்.
இதனை நம்பி கார்லோன் வழங்கிய நிலையில், அந்த கும்பல் கடனை திருப்பி செலுத்தாமல் செல்போன் எண்களை மாற்றி தலைமறைவாகி இருந்து வருவதாகவும், அவர்கள்போலி சான்றிதழ் அளித்து ஏமாற்றியதாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அந்த கும்பலை தேடி வந்துள்ளனர். குறிப்பாக செல்போன் எண் மற்றும் விவரங்களை அடிக்கடி அந்த கும்பல் மாற்றி வந்ததால் போலீசார் கைது செய்யமுடியாமல் திணறி வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டாண்டுகளாக தேடப்பட்ட இந்த கும்பல் நேற்று நீலாங்கரை முட்டுக்காடு பகுதியிலுள்ள ஒரு பங்களாவில் பிடிப்பட்டது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நீலாங்கரையை சேர்ந்தவர்களான முகமது முசாமில், அய்யாதுரை, பால விஜய் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர்கள் கார் லோன் பெற்று மோசடியில் ஈடுபடுவதை வாடிக்கையாக செய்துவந்துள்ளனர். குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி,பேங்க் ஆப் இந்தியா, யூகோ, விஜயா, இந்திய ஓவர்சீஸ் என பல்வேறு வங்கிகளில் இடைத்தரகர் மூலம் அணுகி போலி ஆவணங்களை காண்பித்து கார் லோன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
நீலாங்கரை, பனையூர், முட்டுக்காடு உள்ளிட்ட பல இடங்களில் பங்களா மற்றும் காரை வாடகைக்கு எடுத்து வங்கி அதிகாரிகளை நம்பவைத்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
லோன் மூலம் காரை பெற்றபின் தங்களது பெயரில் ஆவணங்களை மாற்றிய அந்தக் கும்பல் சட்டவிரோதமாக வாடகைக்கு விட்டு சம்பாதித்து வந்துள்ளனர். மேலும் தங்களது செல்போன் எண் மற்றும் விவரங்களை அடிக்கடி மாற்றி தலைமறைவாகி இருந்து வந்துள்ளனர்.
இந்த மோசடி கும்பல் சுமார் 3 கோடியே 80லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இந்த கும்பலிடம் இருந்து ஆடி (Audi), ஜீப் ரேங்கலர் (jeep wrangler)உட்பட பல விலையுயர்ந்த கார்களை பறிமுதல் செய்து வங்கியிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.
Comments