கரை புரளுகிறது பாலாறு.... கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை
பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால், கரையோரம் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள கலவ கொண்ட அணையும், ராணிப்பேட்டை மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள மோர்தானா அணையும் திறக்கப்பட்டுள்ளன. அதனால் வாலாஜா அருகே உள்ள தடுப்பு அணைக்கு வினாடிக்கு 45,000 கன அடி வீதம் நீர் வந்த நிலையில், 40 ஆயிரம் கன அடி வீதம் நீர் பாலாற்றில் திறக்கப்பட்டது.
வேலூரில் பள்ளிக்கொண்டா, விரிஞ்சிபுரம் ஏரிகளின் உபரி நீரும், மேலும் சில சிறிய ஏரிகளில் இருந்து வரும் உபரிநீரும் பாலாற்றில் கலக்கிறது. இருகரையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த வெள்ள பெருக்கில் சிக்கித் தவித்த 2 மாடுகளை கயிறு கட்டி தீயணைப்பு படையினர் மீட்டனர்.
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள தரைப்பாலம் முழுமையாக மூழ்கி தரை பாலத்தில் இருந்து மூன்று அடி அளவிற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அதைக் காண மக்கள் குடும்பம் குடும்பமாக கூடினர். அதனால் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பாலாற்றின் கரையோரம் தாழ்வான பகுதியில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், ஆற்றில் இறங்கி குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ கூடாது என்றும் ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகங்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருவாய் துறையினரும், பொதுப்பணித் துறையினரும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments