புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவும் மாறக்கூடும் - பாலச்சந்திரன்

0 4328
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவும் மாறக்கூடும் - பாலச்சந்திரன்

அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், அது புயலாகவும் மாறக்கூடிய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பிறகு தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்பதால் டிசம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் புயல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து விட்டது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தமிழகத்தின் வட மேற்கு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 23 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் என பாலச்சந்திரன் தெரிவித்தார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 30-ஆம் தேதி தமிழக கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்றும், இதன் காரணமாக டிசம்பர் 1 முதல் 3 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றால் தென் தமிழகப் பகுதிகளில் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பாலச்சந்திரன் விளக்கம் அளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments