இந்திய ஐ.டி துறையின் தந்தை....சத்தமில்லாமல் சாதித்து மறைந்த எப்.சி கோலி யார்?
டி.சி.எஸ். நிறுவனத்தின் நிறுவனரும் முதல் தலைமை செயல் அதிகாரியுமான ஃபாகிர் சந்த் கோலி (அ) எஃப்.சி கோலி (வயது 96) நேற்று காலமானார்.
இந்திய ஐ.டி. உலகின் தந்தை என்று அழைக்கப்படும் எஃப்.சி கோலி மார்ச் 19, 1924 ஆம் ஆண்டு பெஷாவரில் பிறந்தவர். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ மற்றும் பி.எஸ்சி. பட்டப்படிப்பையும், கனடாவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பி.எஸ்சி (ஹான்ஸ்) பட்டப்படிப்பையும் முடித்த பின்னர் 1950 இல் கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார்.
கனடிய ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தில் ஒரு வருடம் பணியாற்றிய பின்னர், 1951 இல் இந்தியாவுக்குத் திரும்பி அவர் டாடா எலக்ட்ரிக் நிறுவனத்தில் சேர்ந்தார்.மும்பை முதல் புனே தடங்களிள் வரையிலான டாடா நிறுவன மின் சேவைப் பணிகளை கணினிமயமாக்கப்பட்டதில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு. டாடா நிறுவனத்தின் கனவுத்திட்டமான தகவல் தொழில்நுட்பத்துறையில் அந்த நிறுவனம் கால்பதிக்க கோலிதான் அடித்தளமிட்டார். 1969-ல், டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் பொது மேலாளர் ஆன கோலி, பின்னர், 1974 ஆம் ஆண்டில், அந்த நிறுவனத்தின் இயக்குனராகவும், 1994 ஆம் ஆண்டு டி.சி.எஸ் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்தியவில் மென்பொருள் துறையில் ஃபாகிர் சந்த் கோலியின் பங்களிப்பிற்காக 2002 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. தனது 94 ஆவது வயது வரை தகவல் தொழில்நுட்பத்துறைக்காக பணியாற்றி, இந்திய ஐ.டி துறையின் தந்தை என்று அழைக்கப்பட்ட எஃப்சி கோலி வயது மூப்பின் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.
காக்னைசன்ட் முன்னாள் தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி, ''இந்திய தொழில்துறையின் அம்சத்தை மாற்றியமைக்கும் ஒரு தொழிற்துறையை வடிவமைத்து, உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடையவர். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் துறையை உருவாக்கி லட்ச கணக்கானவர்களுக்கு உயர்தர வேலைகளை கிடைக்க அடித்தளமிட்டவர். இதற்காக, ஐ.டி நிறுவன ஊழியர்கள் அவரை நினைவு கூர கடமைப்பட்டுள்ளனர் '' என்று இரங்கலில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கலில் "எஃப்சி கோலி, தகவல் தொழில்நுட்ப உலகில் காட்டிய தொலைநோக்கு பார்வையுடன் கூடிய பங்களிப்புகளுக்காக நினைவுகூரப்படுவார். அவரது மறைவு வேதனையளிப்பதாகவும் அன்னாரின் குடும்பத்தினருக்கும் எனது வருத்தங்கள்'' என்று கூறியுள்ளார்.
Shri FC Kohli Ji will be remembered for his pioneering contributions to the world of IT. He was at the forefront of institutionalising a culture of innovation and excellence in the tech industry. Pained by his demise. Condolences to his family and many admirers.
— Narendra Modi (@narendramodi) November 26, 2020
Comments