கோவை: ஆட்சியர் அலுவலகத்தில் மிரட்டும் வகையில் வைக்கப்பட்டிருந்த முள் தடுப்புகள் அகற்றம்!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டு இருந்த முள்கம்பி தடுப்புகள் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்ததையடுத்து காவல் துறையினர் அகற்றினர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள், அரசியல் கட்சியினர் முற்றுகை போராட்டங்களில் ஈடுபடுவது வழக்கம். ஆட்சியர் அலுவலகத்துக்குள் போராட்டக்காரர்கள் நுழைய விடாமல் தடுக்கும் வகையில் முள்கம்பி தடுப்புகளை பந்தயசாலை காவல் துறையினர் உருவாக்கி வைத்தனர். இந்த முள் கம்பிகளை நெருங்கினால் குத்தி கிழித்து காயத்தை ஏற்படுத்தி விடும். இது குறித்து சமூகவலைத் தளங்களில் கடும் விமர்சனம் எழுந்தது. போராட்டக்காரர்களுக்கு காயத்தை ஏற்படுத்தும் வகையில் போலீஸாரே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை கண்டித்து, நேற்று பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் அருகில் முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் முள்கம்பி தடுப்புகள் வைத்திருப்பது குறித்து கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். விதிமுறைகளுக்கு மாறாக முள்கம்பி தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் அவசர அவசரமாக முள்கம்பி தடுப்புகளை அகற்றினர்.
Comments