கர்நாடகா : திருமண விருந்துக்கு சென்றவர்கள் சடலமான பரிதாபம்... 5 இளைஞர்கள் குளத்தில் மூழ்கி பலி

0 4699

கர்நாடக மாநிலத்தில் திருமணம் வீட்டுக்கு சென்ற இளைஞர்கள் 5 பேர் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் மூடிகெரே அருகே வசதாரே என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ரகு என்பவரின் சகோதரி சந்தியாவுக்கு நேற்று திருமணம் நடந்தது. திருமணத்தை முன்னிட்டு கறி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உறவினர்கள் உணவு தயாரித்து கொண்டிருக்கையில், ரகு தன் நண்பர்கள் தீபக், திலீப், சுதீப் சந்தீப் ஆகியோருடன் கிராமத்தில் இருந்த குளத்துக்கு குளிக்க சென்றுள்ளார்.

குளத்துக்கு சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து குளக்கரைக்கு சென்று உறவினர்கள் தேடிய போது, ஆடைகள் மட்டும் கரையில் இருந்துள்ளன. ரகு உள்ளிட்ட 5 பேரையும் காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் குளத்துக்குள் இறங்கி தேடினர்.

அப்போது, குளத்துக்குள் இருந்து ரகு, தீபக், திலீப், சுதீப், சந்தீப் ஆகிய 5 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டது. பலியான ஐந்து பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைத்தது. திருமண வீட்டுக்கு கறி விருந்துக்காக வந்தவர்கள் மணப் பெண்ணின் சகோதரருடன் நீரில் மூழ்கி இறந்தது கர்நாடக மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments