ஆபரேசன் சிங்கம்.. நடுக்கடலில் சிக்கிய ரூ 100 கோடி ஹெராயின்..! இலங்கை கேடிகளுக்கு காப்பு
"சிங்கம்" படத்தில் வருவது போல சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலை நடுக்கடலில் அதிரடியாக சுற்றிவளைத்த கடலோர காவல்படையினர், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்ததோடு, துப்பாக்கிகளுடன் சிக்கிய இலங்கை கேடிகளை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
சர்வதேச கடல் எல்லையில் வாழைத்தீவு என்ற கடல் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற மீன்பிடிப் படகை கடலோரக் காவல் படையினர் சுற்றி வளைத்தனர். படகில் இருந்தவர்கள் தங்களை இலங்கை மீனவர்கள் என்றும் வழிதவறி வந்து விட்டதாகவும் கூறினர்.
"சிங்கம்" படத்தில் வருவது போல அந்த படகில் அதிரடியாக இறங்கி, கடலோர காவல் படையினர் சோதனையிட்ட போது, அதில் 100 கிலோ ஹெராயின் மற்றும் 20 கிலோ கிறிஸ்டல் மேத்தலின் என்ற போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கைத்துப்பாக்கிகளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு 7 கோடி ரூபாய் என்றாலும், கள்ளச்சந்தையில் இதன் மதிப்பு 100 கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது. படகில் இருந்த இலங்கையின் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த நீந்து குலசூரிய சாத்தமனுவேல் , வான குலசூரிய ஜீவன், சமீரா , வர்ணகுல சூரிய மனுவேல் ஜீவன் பிரசன்னா, நிசாந் கமகே, லட்சுமணகுமார் ஆகிய 6 பேரைக் கைது செய்த கடலோரக் காவல் படையினர் அவர்களது கையில் காப்பு மாட்டி அமர வைத்தனர்..!
வங்கக் கடலில் வீசிய புயலால் 6 பேரையும் தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு கொண்டுச்சென்ற கடலோரக் காவல் படையினர் அவர்களையும் போதைப் பொருட்களையும், மத்திய போதைப் பொருள் தடுப்பு புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக கடலோர காவல் படை ஐஜி புருஷோத்தமன் தலைமையிலான அதிகாரிகள் 6 பேரிடமும் விசாரணை நடத்தினர். இதில் தங்கு கடல் மீன் பிடிப்பதற்குச் செல்வது போல, ஈரானுக்குச் சென்று பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருட்களை அங்கிருந்து இலங்கைக்கு கடத்திச்சென்றது தெரியவந்தது.
விசாரணைக்குப் பிறகு அவர்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரைக்கு அழைத்துச் சென்றனர். 6 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட இருப்பதாக உளவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இலங்கை போதைப் பொருள் கடத்தல் கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் குறித்து உளவுப் பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சென்னையில் இந்த கும்பலுக்கு உதவும் நபர்கள் உள்ளனரா? என்பது குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Comments