பியர்கிரில்ஸ்சான சென்னையன்ஸ்..! துணி நனைந்தாலும், துணிவே துணை..!
நிவர் புயலால் கொட்டித்தீர்த்த கனமழைக்கு அரசு மேற்கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால், சென்னையின் முக்கிய பகுதிகள் தப்பித்தாலும், புற நகரில் உள்ள செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், ஊரப்பாக்கம் பொத்தேரி உள்ளிட்ட ஏரியாக்கள் பழையபடி ஏரியாக மாறியுள்ளது. இடுப்பளவு வெள்ளம் சூழ்ந்த நிலையிலும், வீடுகளை விட்டு துணிச்சலுடன் வெளியேறிவரும் நம்ம ஊரு பியர்கிரில்ஸ்களின் திக் திக் பயணம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
ஆட்டோவை ஓடம் போல தள்ளிவரும் இந்த காட்சியை பார்த்தாலே இந்த பகுதியில் எந்த அளவு மழை நீர் தேங்கி உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்..! செங்கல்பட்டு மாவட்டம் திருப்போருர் தொகுதியில் உள்ள 108 ஏரியில் 48 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது 60 ஏரிகள் 90 சதவீதத்தை நீர் கொள்ளவை எட்டியுள்ளது.
குறிப்பாக தையூர், மானாமதி, சிறுதாவூர், பி.வி களத்தூர், கொண்டங்கி, காயார் உள்ளிட்ட 11 பெரிய ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் தையூர் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் பெரும்பாலன பகுதிகளை வெள்ளகாடாக்கி உள்ளது.
சென்னையின் புற நகர் பகுதிகளான செம்மஞ்சேரி ஜவகர் நகர் ஏரியா தான் தற்போது எரிபோல நீர் நிரம்பி காட்சி அளிக்கின்றது. இங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், பாம்புகள் உள்ளிட்ட விஷசந்துக்கள் வரும் என்பதால் துணி நனைந்தாலும் பரவாயில்லை என்ற துணிச்சலுடன் குடும்பம குடும்பமாக வெள்ள நீருக்குள் இறங்கி பாதுகாப்பான இடம் தேடி செல்கின்றனர்.
பெரும்பாக்கம் எழில் நகர் பகுதியில் வெள்ளத்திற்குள் இறங்கி கடந்த உள்ளூர் பியர்கிரில்ஸ் அரைடவுசருடன் தங்கள் பிள்ளை குட்டிகளுடன் பாதுகாப்பான இடம் தேடி முன் எச்சரிக்கையாக புறப்பட்டு சென்றனர்.
பெண்களும் தங்கள் பங்கிற்கு தேவையான முக்கிய பொருட்களை மட்டும் பையில் வைத்து எடுத்துக் கொண்டு தங்கள் வாழ்விடங்களை விட்டு புறப்பட்டுச்சென்றனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட புற நகர் பகுதி என்பதால் அதிகாரிகளின் பார்வை தங்கள் ஏரியா மீது படாததால் தாங்கள் இங்கிருந்து செல்வதாக தெரிவித்தனர்.
சென்னைக்கு மிக அருகில்..! 10 அடியில் தண்ணீர்..! உடனடி வங்கிக்கடன்..! என்றெல்லாம் விளம்பரம் செய்து அடுக்குமாடி குடியிருப்புகளை லட்சங்களுக்கும், கோடிகளுக்கும் விற்றவர்கள், மழை காலத்தில் அங்கு 10 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கும் என்பதை சொல்ல மறந்து விட்டனர் என்பதை பெரும்பாக்கத்தின் அடுக்குமாடி குடியிருப்பை சுற்றியுள்ள மழை வெள்ளம் நினைவூட்டுகின்றன
என்னதான் கோடிகளை கொட்டி பிரமாண்டமாக பில்டிங் கட்டினாலும் ,அதில் மழை நீர் சேமிப்பு அமைப்பு இருக்குதோ இல்லையோ, மழை நீர் வடிய போதிய வடிகால் இல்லையென்றால், இப்படித்தான் வெள்ள நீர் மறுகால் பாயும் என்பதை இந்த வருடமும் பொத்தேரி எஸ்.ஆர்.எம் மருத்துவமனைக்கு சுட்டிக்காட்டிச்செல்கின்றது ஏரியின் உபரி நீர்..!
ஊரப்பாக்கம் பகுதியை பற்றி சுருங்க சொல்ல வேண்டுமானால் ஏரியை ஆக்கிரமித்து வீடுகளை கட்டி ஏரியாவாக்கியவர்களுக்கு, இது எங்கள் இடம் என்று ஒவ்விரு மழைகாலத்திலும் பழையபடி ஏரியாக்கி காட்டுவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது
இது போன்று தாழ்வான நிலப்பரப்புகளில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட அனுமதி கேட்கும் போது முறையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றதா ? என்பதை ஆராய்ந்து, சிஎம்டிஏ அதிகாரிகளும், மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டகுழும அதிகாரிகள் அனுமதி அளித்திருந்தால் அப்பகுதி மக்கள் மழை காலத்தில் இத்தகைய துன்பத்துக்குள்ளாகி இருக்க மாட்டார்கள் என்றும் அங்கு தேங்கும் தண்ணீரை வடியவைக்க போதிய வடிகால்கள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்
அதே நேரத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் தீவிர மீட்பு பணிகளால் நகரின் பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழை நீர் உடனடியாக அகற்றப்பட்டது இருந்தாலும் மன்சூரலிகான் போன்ற அரசியல்வாதிகள் சென்னை முழுவதும் வெள்ளத்தில் மிதப்பது போல பில்டப் கொடுத்து வீடியோ வெளியிட்டது கொஞ்சம் ஓவர் தான்..!
Comments