கடலூரில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு...

0 1935
கடலூரில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் நிவர் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கடலூர் மாவட்டத்தில் அதி தீவிர நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிற்பகலில் கடலூர் சென்றார். முதலில் ரெட்டிச்சாவடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து கீழ்குமாரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் புயலால் பாதிக்கப்பட்ட வாழைத் தோப்புகளை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்து, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பாதிப்பு குறித்த விவரங்களை முதலமைச்சரிடம் தெரிவித்தார்.

பின்னர், மேல்அழிஞ்சிபட்டு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளத்தில் மூழ்கிய நெல், சோளம் உள்ளிட்ட பயிர்களை முதலமைச்சர் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து, தேவனாம்பட்டினம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை அவர் வழங்கினார். பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகளில் துரிதப்படுத்தவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.

கடலூர் துறைமுகம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புயலால் சேமடைந்த படகுகள் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது பொதுமக்கள், மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை முதலமைச்சரிடம் அளித்தனர். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி, புயல் சேதங்கள் மற்றும் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து, கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் எம்சி சம்பத் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments