கனமழை: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் அவதி

0 2270
கனமழை: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் அவதி

கனமழையால்  திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளதால், குடியிருப்புவாசிகள் அவதியடைந்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல், அதி தீவிர புயலாக புதுச்சேரி - மரக்காணம் இடையே கரையைக் கடந்தது. இதன் காரணமாக, பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், பட்டாபிராம், திருமுல்லைவாயல் பகுதிகளில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றது. குடியிருப்பு வாசிகள்  வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்கு ஆளாகினர்.

மழைநீருடன் கழிவு நீரும் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பருத்திப்பட்டு ஏரி நிரம்பி, உபரி நீர் செல்ல வழியின்றி ஆவடி - பூந்தமல்லி தண்ணீர் ஆறு போல் ஓடியது.

வியாசர்பாடி முல்லை நகர், வசந்தகார்டன் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மழைநீர் தேங்கி, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தெருக்களில் தேங்கி நிற்கும் மழைநீரில், சிறுவர்கள் ஆபத்தை உணராமல் பி.வி.சி. பைப்புகள் மூலம் நீச்சலடித்து விளையாடி வருகின்றனர். 

வானகரம் பூ மார்க்கெட்டில் மேலே அமைக்கப்பட்டிருந்த இரும்பு தகடுகளால் ஆன மேற்கூரைகள் காற்றில் தூக்கிவீசப்பட்டன
பூ மார்க்கெட் முழுவதும் மழைநீர் தேங்கி வெள்ளக்கடானது. மேலும் சேரும், சகதியுமாக காட்சியளிப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிச்சாட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 5ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், 5 ஆண்டுகளுக்கு பிறகு ஆரணியாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் செல்லும் வழியில் அமைந்துள்ள தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

தொடர் மழையால் ரெட்டேரி ஏரி நிரம்பி, அருகேயுள்ள அறிஞர் அண்ணா நகர் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்களை வேறு இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபள்ளி அணையில் இருந்து வினாடிக்கு 1,100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு  பகுதிகளை சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments