2000 வீடுகளில் மழைநீர் புகுந்தது... மழைநீரை வெளியேற்ற முயற்சி
நிவர் புயலின் தாக்கத்தால் புதுச்சேரியில் பெருமழை பெய்த நிலையில், நகரின் தாழ்வான பகுதிகளில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீரை வடிய வைக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்றிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால் மணிக்கு 145 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்த அளவுக்குக் காற்றின் வேகம் இல்லாவிட்டாலும் அதி கனமழை பொழிந்தது.
புதுச்சேரியில் நேற்றுக் காலை முதல் இன்று காலை வரை 30 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் புதுச்சேரி எல்லைப் பிள்ளைச் சாவடி இந்திரா சிலை சந்திப்பில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
முதன்மையான சாலைச் சந்திப்பான அப்பகுதி வழியாகச் செல்லும் வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடியே செல்ல வேண்டியுள்ளது. இதேபோல் சாலையையொட்டிய குடியிருப்புப் பகுதிகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்திரா சிலை சந்திப்பில் மழைநீர் தேங்கியுள்ளதன் கழுகுப் பார்வைக் காட்சிகளை இப்போது காணலாம்...
புதுச்சேரி ரெயின்போ நகர், வெங்கடா நகர், சுதந்திரப் பொன்விழா நகர் உள்ளிட்ட பகுதிகளில் 2000 வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையினர், மாநகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் இணைந்து சாலைகளை வெட்டியும், மோட்டார்கள் மூலம் நீரை இறைத்தும் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம், லால் பகதூர் சாஸ்திரி நகர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் புயலின்போது சாய்ந்தும், முறிந்தும் சாலைகளில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.
புதுச்சேரி உப்பளம் பகுதியில் புயலின்போது மரத்தில் இருந்து முறிந்த சிறிய கொப்பு மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள மின் கம்பியின் மீது மாட்டிக்கொண்டது. மின்துறை ஊழியர் ஒருவர் மின்கம்பத்தில் ஏறியபின் ஒரு மின்கம்பியில் கால்களை ஊன்றியும் மற்றொரு மின்கம்பியைக் கைகளால் பிடித்தபடியும் கம்பி வழியாகச் சென்று அந்த மரக்கொப்பை அகற்றிவிட்டு மீண்டும் மின்கம்பம் வழியே தரையிறங்கினார்.
புயலுக்குப் பின் மின்சாரம் வழங்குவதற்காக ஆபத்தான பணியை மேற்கொண்ட மின்துறை ஊழியரை முதலமைச்சர் நாராயணசாமி பாராட்டினார்.
Puducherry: National Disaster Response Force (NDRF) personnel clear uprooted trees in Kamaraj Nagar area#CycloneNivar pic.twitter.com/OcNNmPCL9l
— ANI (@ANI) November 26, 2020
Comments