பேரிரைச்சலுடன் கரையைக் கடந்த நிவர் புயல்..!
அதிதீவிரப் புயலான நிவர் புயல் புதுச்சேரி, மரக்காணம் இடையே பேரிரைச்சல், பெருங்காற்று மற்றும் கனமழையுடன் நள்ளிரவு 2.30 மணியளவில் கரையைக் கடந்தது.
அதி தீவிரப் புயலாக அறிவிக்கப்பட்ட நிவர் புயல் புதுச்சேரிக்கும், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்துக்கும் இடையே நள்ளிரவில் கரையைக் கடந்தது.
முதலில் புயலின் வெளிச்சுவர் இரவு 11.30 மணியளவில் கடலூர் கடல் பகுதியைத் தொட்டதும் அங்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து சென்ற நிவர் புயலால் சில இடங்களில் 120 கிலோ மீட்டர் முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், சில இடங்களில் 145 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசியது.
இதனால் புதுச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் பகுதிகளில் சில இடங்களில் மரங்கள் பெயர்ந்து சாலைகளில் விழுந்தன.
பேரிரைச்சலுடன் புயல் கரையைக் கடந்ததால் புதுச்சேரி, கடலூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
புயலின் வெளிச்சுவர் கடந்து சென்ற ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் அதன் மையப் பகுதி புதுச்சேரியின் வடக்குப் பகுதியில் நுழைந்தது. இதனால் அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாகக் காணப்பட்டது.
புயலின் தாக்கத்தினால் முறிந்து விழுந்த மரங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் சில இடங்கள் இரவு முழுவதும் இருளில் மூழ்கின.
இதனிடையே புயல் கரையைக் கடப்பதற்கு மேலும் சில மணி நேரம் தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரவு 11.30 மணிக்குத் தொடங்கிய புயலின் தாக்கம் நள்ளிரவில் 2.30க்கு முடிவுக்கு வந்தது.
நிவர் புயல் கடல் பகுதியில் இருந்து 3 மணி நேரமாகக் கரையைக் கடந்த நிலையில் அடுத்த 6 மணி நேரம் வரை தாக்கம் நீடிக்குமென்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் கரையைக் கடந்ததால் தமிழகத்தில் பெய்து வந்த மழை படிப்படியாகக் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments