நூற்றாண்டின் ஒப்பில்லா கால்பந்தாட்ட வீரன் - டியாகோ மரடோனா

0 3281

அர்ஜெண்டினா அணியின் முன்னாள் கேப்டனும், கால்பந்து வீரருமான டியாகோ மரடோனா (60) மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவரது இறப்பு கோடிக்கணக்கான கால்பந்தாட்ட ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அர்ஜெண்டினா நாட்டின் தலைநகரான பியூனோ ஏர்ஸ் அருகே உள்ள வில்லா ஃபியோரிடா என்ற சிற்றூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் மரடோனா. வீட்டின் 4-வது பிள்ளையாகப் பிறந்த மரடோனா, தனது இளம் வயதை வறுமையில் கழித்தார். 3 வயது இருக்கும் போது மாரடோனாவுக்கு அவரது உறவினர் ஒருவர் கால்பந்து ஒன்றை பரிசாக கொடுத்துச் சென்றார். விவரம் தெரியாத 3 வயதில் பந்தை எட்டி உதைக்கத் தொடங்கிய மாரடோனா பின்னாட்களில் அந்த விளையாட்டு தான் தனது எதிர்காலம் எனத் தீர்மானித்தார்.

தனது எட்டாவது வயதில் அர்ஜெண்டினா ஜூனியர்ஸ் கால்பந்தாட்ட குழுவில் இடம்பெற்று விளையாடினார். கால்பந்து விளையாட்டு மீதிருந்த பற்றும் வெறியும் மாரடோனாவை தனிப்பெரும் வீரராக உலகிற்கு அடையாளம் காட்டியது. தனது 16ஆவது வயதில் தொழில்முறை கால்பந்தாட்ட வீரராக அறிமுகமான மாரடோனா, கால்பந்தாட்ட உலகில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றிருந்தார்.

1986 ல் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வெற்றிவாகை சூடுவதற்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தார். அணியின் கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்டு வீரர்களை சிறப்பாக வழிநடத்தினார். அதுவரை கால்பந்து உலகம் பார்க்காதவகையில் கோல்கள் அடித்து அர்ஜெண்டினா அணியை சாம்பியனாக்கினார் மரடோனா. அந்தத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் மரடோனா அடித்த கோல் இன்றுவரை கால்பந்து வரலாற்றில் மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

1990 உலகக்கோப்பையிலும் அர்ஜெண்டினாவை இறுதிப்போட்டிவரை அழைத்துச் சென்றார் மரடோனா. 1991 காலகட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையாகி சர்ச்சையில் சிக்கினார். 1994 உலகக்கோப்பை போட்டியில் மரடோனா, போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, உலகக்கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்த உலகக்கோப்பை தொடர்தான் மரடோனா அர்ஜென்டினாவுக்காகக் விளையாடிய கடைசி தொடர்.  

இளைய தலைமுறை கால்பந்து விளையாட்டு மூலம் எப்படி சிகரத்தை அடைந்தாரோ அதேபோல் அந்த விளையாட்டு மூலம் இவர் சிக்காத சர்ச்சைகளே இருந்திருக்க முடியாது. மனநல பிரச்சனை, ஊக்க மருந்து பயன்பாடு, செய்தியாளரை நோக்கி ஏர் கன்னில் சுட்டது என இவரைச் சுற்றி ஏராளமான சர்ச்சைகளும் உண்டு.

2010 ல் அர்ஜெண்டினாவின் பயிற்சியாளராக உலகக்கோப்பை அரங்குக்குள் மீண்டும் காலடி வைத்தர். மேலும். அவர் அர்ஜெண்டினா அணிக்கு மட்டும் விளையாடாமல் நபோலி, பார்சிலோனா அணிகளுக்காகவும் விளையாடியிருக்கிறார்.

இந்தியாவில் கேரளா மற்றும் நாகலாந்தில் மாரடோனா பேன்ஸ் கிளப்கள் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2000-ம் ஆண்டு மரடோனாவை நூற்றாண்டின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்து மிக உயர்ந்த கவுரவத்தை வழங்கியது ஃபிஃபா அமைப்பு.

அதிக புகழ் மற்றும் சர்ச்சைகளுடன் வாழ்ந்த மரடோனா, கடந்த நவம்பர் 3-ம் தேதி மூளையில் ரத்தக் கசிவு கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது இறப்பையொட்டி அர்ஜெண்டினா ஜனாபதிபதி ஆல்பர்டோ பெர்னாண்டஸ் மூன்று தினங்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளார். அவரது மறைவி கோடிக்கணக்கான கால்பந்தாட்ட ரசிர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments