‘நிவர்’ புயல் வாட்ஸ் அப்பில் அட்லியன்ஸ் அட்டூழியம்..! பழைய வீடியோவை பரப்புகின்றனர்
நிவர் புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் யூடியூப்பில் இருந்து பழைய வீடியோக்களை பதிவிறக்கம் செய்யும் ஆசாமிகள் சிலர் புதிது போல வாட்ஸ் அப்பில் பகிர்ந்து மக்களிடையே குழப்பத்தையும் பீதியையும் ஏற்படுத்தி வருகின்றனர். பழைய காட்சிகளை புதிய காட்சிகளாக பரப்பும் அட்லியன்ஸ் அட்டூழியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை பூந்தமல்லி சாலையில் சைன்போர்டு கழன்று விழுந்து வாகன ஓட்டிகள் பலியானதாக கடந்த இரு தினங்களாக இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும் வாட்ஸ் ஆப்பிலும் வேகமாக பரப்பபட்டுவருகின்றது.
உண்மையில் இந்த சம்பவம் 3 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானின் தலைநகரான கராய்ச்சியில் நடந்ததாக கூறப்படும் நிலையில் புயல் குறித்த அறிவிப்பு வெளியானதுமே இது போன்ற பழைய வீடியோவை புதிய வீடியோ போன்று தலைப்பிட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் பரப்பிவருகின்றனர் பழையதை சுட்டு புதிதாக்கும் வல்லமை படைத்த அட்லியின் தம்பிகள்..!
அதே போல புதன்கிழமை பெரும்பாலான மக்கள் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் சென்னை அசோக் நகர் காசி தியேட்டர் அருகே அடையாறு ஆற்றில் வெள்ளம் வந்து முதல்மாடி மூழ்கியதாக அடித்து விட்டனர் சில அட்லியன்ஸ்..!
உண்மையில் இந்த வீடியோ 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையின் பெரு வெள்ளத்தின் போது மெட்ரோ ரெயிலில் இருந்து எடுக்கப்பட்டது.
இதனை காலத்திற்கு ஏற்ப மாற்றி தற்போது எடுக்கப்பட்டது போன்று வாட்ஸ் அப்பில் பரப்பி மக்களை பீதிக்குள்ளாக்கி இருக்கின்றது சமூக விரோத கும்பல் ஒன்று..!
மேலும் புதன்கிழமை மாலை நிலவரப்படி காசி தியேட்டர் அருகே அடையாற்றில் சொல்லும் அளவுக்கு கூட தண்ணீர் செல்லவில்லை என்பது தான் உண்மை..!
மக்களை உஷார் படுத்துகிறோம் என்ற பெயரில் எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்தாமல் தெரிந்தவர்களும், நண்பர்களுக்கும் தகவலை அனுப்பி வைக்கும் அப்பாவிகள் உள்ளவரை வதந்திகளை பரப்பும் அட்லியன்ஸ் அட்டகாசம் வாட்ஸ் அப்பில் தொடரவே செய்யும்.
அதே நேரத்தில் எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்திய பின்னர் அதனை வாட்ஸ் அப்பில் பகிர்வதன் மூலம் பேரிடர் காலங்களில் வீணான வதந்திகள் பரவுவதை தவிர்க்கலாம்..!
Comments