திருமணமாகி ஒரே மாதத்தில் விபத்தில் பெண் காவலர் பலி... போலீஸார் பேனர் வைத்து அஞ்சலி!
திருமணமான ஒரே மாதத்தில் சாலை விபத்தில் பலியான தாராபுரம் பெண் காவலர் சகுந்தலாவுக்கு பேனர் வைத்து போலீஸார் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த 2017- ம் ஆண்டு காவலராக பணிக்கு சேரந்த சகுந்தலா, கடந்த ஒரு ஆண்டாக தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் திண்டுக்கல்லை சேரந்த கதிர்வேல் என்பவருக்கும் கடந்த மாதம் 18- ஆம் தேதி திருமணம் நடந்தது. விடுப்பில் இருந்த காவலர் சகுந்தலா நேற்று பணியில் சேர்வதற்காக தன் கணவரோடு மோட்டார் சைக்கிளில் திண்டுகல்லில் இருந்து தாராபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தார். ரெட்டியார் சத்திரம் என்ற பகுதியில் அவர்கள் வந்து கொண்டிருந்த போது, மற்றோரு இரு சக்கரவாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் கதிர்வேல் லேசான காயத்துடன் உயிர் தப்பி விட , சகுந்தலாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, சகுந்தலாவுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையும் பின்னர் மதுரை ராஜாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. எனினும், சகுந்தலா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து திண்டுக்கல் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் பெண்காவலர் உயிரிழந்தார் சம்பவம் தாராபுரம் பகுதி காவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், சகுந்தலா பணியாற்றி வந்த தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில பேனர் வைத்து போலீஸார் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
Comments