செம்பரம்பாக்கம் - 5 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு

0 6065
செம்பரம்பாக்கம் - 5 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியான செம்பரம்பாக்கம் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று திறக்கப்பட உள்ளதால் அடையாற்றின் கரையோர பகுதிகள் முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

24 அடி உயரமுள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது நீர்மட்டம் 21.5 அடியாக உள்ளது. மழை காரணமாக நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளதால் எந்த நேரமும் ஏரி நிரம்ப வாய்ப்புள்ளது. 22 அடிக்கு அதிகமாக சேரும் நீர் வெளியேற்றப்பட வேண்டும் என்பதால்,முதல்கட்டமாக நண்பகல் 12 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடி என்ற அளவில் நீர் திறக்கப்பட உள்ளது.

தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி ஏரி நீர் செல்லும் பகுதிகளில் அமைந்துள்ள திருநீர்மலை, குன்றத்தூர், சிறுகளத்தூர், கெழுத்திப்பேட்டை, அனகாபுத்தூர், முடிச்சூர், மற்றும் அடையாறு கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏரிக்கு வரும் நீர் வரத்தை பொறுத்து படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூறாண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் சுமார் 41 சென்டி மீட்டர் அளவிற்கு சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. அப்போது செம்பரம்பாக்கம் ஏரியை தாமதமாகத் திறந்ததே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னை நீரில் தத்தளிக்க காரணம் என ஒரு புகார் எழுந்தது. அப்போது ஏரியிலிருந்து திறக்கப்பட்ட நீர் மற்றும் மழை நீர் என வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி வரை அடையாற்றில் சென்றது. இதனால் தான் சென்னைக்குள் அடையாறு புகுந்தது.

ஆனால் இப்போது அடையாற்றில் 4ஆயிரம் கன அடி நீர் மட்டுமே செல்கிறது. மேலும் ஆயிரம் அடி மட்டுமே தற்போதைக்கு செம்பரம்பாக்கத்தில் இருந்து திறக்கப்பட உள்ளதால் அடையாறறில் 5000 கன அடி நீர் செல்ல மட்டுமே வாய்ப்புள்ளது. மேலும் அடையாற்றில் சுமார் 60ஆயிரம் கன அடி நீர் வரை சென்றாலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் அடையாறு ஆற்றின் வழியாக கடலில் கலக்கிறது. எனவே அதன் இருமருங்கிலும் உள்ள தாழ்வான பகுதிகளான கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர்,அம்மன் நகர். பர்மா காலனி, ஜாபர்கான்பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் போன்ற இடங்களில் வசிப்பவர்கள், அருகில் உள்ள மாநகராட்சி நிவாரண மையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சென்னை மாநகராட்சியில் 169 நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments