ஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..! செல்போனுக்கு முன் எச்சரிக்கை

0 29314
ஊருக்குள் வருகின்றது ’நிவர்’... கார் வைத்திருபோரே உஷார்..! செல்போனுக்கு முன் எச்சரிக்கை

நிவர் புயல் காரணமாக அடுத்த சில தினங்கள் மழை கொட்டித்தீர்க்கும் நிலை உள்ளதால் கார் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கார் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் எஸ்.எம்.எஸ் மூலம் வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு முன் எச்சரிக்கை மணி அடித்து வருகின்றன.

நினைத்தாலே நெஞ்சமெல்லாம் அஞ்சும் 2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ள பாதிப்பில் 12 ஆயிரம் கார்கள் வரை நீரில் மூழ்கி மிதந்தன. பாதிக்கப்பட்ட கார்களுக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தாலும் காரின் உரிமையாளர்களும் தங்கள் பங்கிற்கு பணம் கட்ட வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது..!

பலர் தண்ணீரில் நின்ற தங்களது கார்களை ஸ்டார்ட் செய்ததால் என்ஜினுக்குள் தண்ணீர் புக காரணமாக அமைந்ததாக கூறப்பட்டது. அப்போதைய பெருமழை வெள்ளம் காரின் உரிமையாளர்களை மட்டுமல்லாமல் கட்டண சேவை வழங்குகின்ற கார் விற்பனையாளர்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்களையும் புரட்டிபோட்டது. வர்தா புயலின் போதும் மரங்கள் விழுந்து ஏராளமான கார்கள் சேதமடைந்தன.

இதையடுத்து பேரிடர்காலங்களில் கார் வைத்திருப்போரின் நலன் கருதி செல்போனுக்கு முன் எச்சரிக்கை தகவல் அனுப்புவதை கார் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தற்போது கடைபிடிக்க தொடங்கியுள்ளன.

அந்த வகையில் வங்க கடலில் மையம் கொண்டுள்ள நிவர் அதிதீவிர புயலாக கரையை கடக்கும் முன்பும் கரையை கடந்த பின்னரும் சூறாவளிக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்க்கும் என்பதால் 7 மாவட்ட மக்கள் உஷாராக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தங்களிடம் லட்சங்களை கொட்டியோ, இ.எம்.ஐ கட்டியோ கார் வாங்கிய வாடிக்கையாளர்கள் நலன் கருதி கார் நிறுவனங்களும், காப்பீட்டு நிறுவனங்களும் முன் எச்சரிக்கை குறிப்புகளை குறுந்தகவலாக வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பி வருகின்றன..!

கடந்த பெருவெள்ளத்தின் போது மாருதி சுசுகி நிறுவன கார்கள் மட்டும் 6 ஆயிரம் வரை பாதிக்கப்பட்டதால், மாருதி சுசுகி நிறுவன கார்கள் வைத்திருப்போரின் செல்போனுக்கு அந்த நிறுவனத்தினர் அனுப்பியுள்ள குருந்தகவலில் மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

அடுத்த சில தினங்களுக்கு அதிவேக காற்றுடன் கடுமையான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே தங்கள் கார்களை மரங்களுக்கு அடியிலோ, பழைய பலமிழந்த சுவர்களின் அருகிலோ நிறுத்தி வைப்பதை தவிர்க்க அறிவுறுத்தியுள்ளனர். காரை நிறுத்தி விட்டுச்செல்லும் போது பார்க்கிங் பிரேக்கை போட்டு விட்டு சென்றால் காரின் நான்கு சக்கரங்களும் நிலையாக ஒரு இடத்தில் நிற்க உதவும் என்றும் மழை நீரால் கார் இழுத்துச் செல்லப்படாமல் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள மாருதி நிர்வாகம், கூடுமானவரை காரின் என்ஜினுக்குள் தண்ணீர் புகாமல் பார்த்துக் கொள்ள கூறியுள்ளனர்.

மேலும் அப்படி கார்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவசர உதவிக்கு 7071284663 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். அவர்களை போலவே கார்களுக்கு காப்பீடு வழங்குகின்ற எச்.டி.எப்.சி எர்க்கோ நிறுவனமும் காரின் உரிமையாளர்களுக்கு முன் எச்சரிக்கை குறுந்தகவல் ஒன்றை அனுப்பி உள்ளது.

அதில் தயவு செய்து வெள்ள நீரில் காரை இயக்காதீர்கள் என்றும் ஒரு வேளை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் நீரில் மூழ்க நேர்ந்தால் எக்காரணத்தை கொண்டு காரை இயக்காமல், அருகில் உள்ள கார் பழுது நீக்குபரை அழைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். கூடுமானவரை மரங்கள், மின்கம்பங்களை விட்டு தொலைவில் கார்களை நிறுத்தும் படி கேட்டுக் கொண்டுள்ளனர். காரணம் இது போன்ற மழை மற்றும் புயல் நேரங்களில் அவை கார் மீது விழுந்து விட வாய்ப்புள்ளது என்றும் குடும்பத்தினருடன் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளனர்.

கார் வைத்திருப்போர் மட்டுமல்ல இரு சக்கர வாகன ஓட்டிகளும் மழை நேரத்தில் சாலையில் நிரம்பி இருக்கும் நீருக்குள் எங்கு குழிகள் கிடக்கும் , பாதாள சாக்கடை திறந்து கிடக்கும் என்பது தெரியாது என்பதால் அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது என்கின்றனர் போக்குவரத்து காவல்துறையினர்.

பொதுவாகவே முன்எச்சரிக்கை என்பது அனைவருக்குமான ஒரு அலர்ட் என்று எடுத்துக் கொண்டு பின்பற்றினால் பணஇழப்புகளை தடுத்து வாகனங்களை பாதுகாக்கலாம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments