முகநூலில் பெண்களை மயக்கி பணம் பறிக்கும் பிளேடு காதலன் கைது..! மாணவி விஷம் குடித்தார்
திருத்தணியில், பள்ளி மாணவி முதல் பல பெண்களை முகநூலில் காதல் வலையில் வீழ்த்தி, கையை அறுக்க வைத்து பணம் பறித்த பிளேடு காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த ஆர்கே பேட்டை ஆதிவராகபுரத்தை சேர்ந்தவர் வேலு. 12 ஆம் வகுப்பு படித்து வந்த இவரது மகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை மறைத்த வேலு, தனது மகளின் சடலத்தை போலீசுக்கு தெரியாமல் தகனம் செய்து விட்டார்.
இந்த நிலையில் தனது மகள் பயன்படுத்திய செல்போனை எடுத்துப் பார்த்த போது வாட்ஸ் அப்பில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் அனுப்பிய குரல்பதிவுகளும் தனது மகள் விஷம் குடிக்கும் வீடியோவும் இருந்தது. குரல் பதிவில் அதே ஊரை சேர்ந்த தீரன் என்பவர் வாட்ஸ் அப் மூலம் காதல்வலையில் வீழ்த்தி ஏமாற்றியதால் மாணவி உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து தனது மகளின் மரணத்திற்குக் காரணமான தீரன் மீது காவல் நிலையத்தில் வேலு புகார் அளித்த நிலையில், மகளின் தற்கொலையை மறைத்து தகனம் செய்ததாக, கிராம நிர்வாக அலுவலரின் புகாரின் பேரில் வேலுவை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
ஜாமீனில் வெளியே வந்த நிலையில் வேலு, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனை சந்தித்து, தனது மகளின் மரணத்திற்குக் காரணமான தீரன் மீது நடவடிக்கை மேற்கொள்ள ஆதாரங்களுடன் புகார் அளித்தார். புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. காவல்துறையினரின் விசாரணையில் பள்ளி மாணவியின் தற்கொலையின் பின்னணியில் மறந்திருந்த பிளேடு காதலன் தீரன் போலீஸ் பிடியில் சிக்கினான்.
வேலு, தனது மகள் ஆன்லைனில் கல்வி கற்பதற்காக ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். அதில் மாணவியின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அவருடன் படித்த மாணவன் ஒருவன் குறுந்தகவல் அனுப்புவதை வாடிக்கையாக்கியுள்ளான். இதற்கு அந்த மாணவன் தீரனின் வாட்ஸ் அப் எண்ணைப் பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது.
இருவரும் செய்த சாட்டிங்குகளை பார்த்த தீரன் ஒரு கட்டத்தில் அந்த மாணவன் பேசுவது போல பேசி சிறுமியை காதல் வலையில் சிக்கவைத்துள்ளான். பின்னர் அந்த சிறுமியை மிரட்டி இவ்வளவு நாட்களும் போட்டோ அனுப்பியது, குறுந்தகவல் அனுப்பியது எல்லாம் தனக்கு தான் என்று கூறி சிறுமியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளான்.
ஒரு கட்டத்தில் தீரனின் மயக்கும் பேச்சில் சொக்கிபோய் அவன் சொன்னதையெல்லாம் செய்யும் அளவுக்கு அந்த மாணவி மாறியுள்ளார். இதனை சாதகமாக்கி அந்த சிறுமியை தனது இச்சைக்கு பயன்படுத்தியதோடு, அவ்வப்போது தன் மீதான காதலை நிரூபிக்க கையை பிளேடால் அறுத்து அதனை படமாக எடுத்து பதிவிடும் படி கூற 10 முறைக்கு மேல் அவன் சொல்படி செய்துள்ளார். மேலும் தந்தைக்குத் தெரியாமல் பணத்தையும் எடுத்துக் கொண்டு தீரனுக்கு கொடுத்துள்ளார்.
அதன் பின்னர் வேறொரு பெண் கிடைத்ததால் அந்த மாணவியை கைகழுவ திட்டமிட்ட தீரன், தன்மீதான காதலை உண்மை என்று நிரூபிக்க உயிரை விடுவாயா ? என்று சவால் விட, காதலுக்காக உயிரையே கொடுப்பேன் என்று வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும், தீரன் இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதல் வலையில் வீழ்த்தி, அங்கிருந்து 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை எடுத்துக் கொண்டு தமிழகம் தப்பி வந்ததும் தெரியவந்தது.
இந்த இருவர் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல், வத்தலகுண்டு, என ஏராளமான ஊர்களைச் சேர்ந்த பெண்களை முகநூல் மூலம் காதல் வலையில் வீழ்த்தி லட்சக்கணக்கில் பணம் பறித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீரனை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கின் விசாரணைக்காக ஆர்.கே பேட்டை காவல் ஆய்வாளர் இலங்கைக்கே சென்று விசாரித்து தக்க ஆதாரங்களை திரட்டி வந்தது குறிப்பிடதக்கது.
பெண்கள் முக நூலை நம்பி வாழ்க்கையை ஒப்படைத்தால் முடிவில் என்னமாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி..!
Comments