திருமண கோலத்தில் தேர்வெழுத வந்த மணமகள் - குடகில் ருசிகரம்!
கர்நாடக மாநிலம் குடகில் திருமணம் முடிந்த கையோடு திருமணக் கோலத்தில் வந்த மணமகள் ஒருவர், வங்கிப் போட்டி தேர்வு எழுதிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம், குடகு மாவட்டம் மடிகேரி தாலுகா அசோக்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாதி. கல்லூரி படிப்பை முடித்த இவர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான போட்டித் தேர்வுக்கு ஒன்பது மாதங்களுக்கும் மேலாகத் தயாராகி வந்தார். இந்த நிலையில் இவருக்கும், சுண்டிகொப்பா அருகே மதிகாமா கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயமானது. அதன்படி ஞாயிற்றுக் கிழமையன்று சுவாதிக்குத் திருமணம் நடைபெற்றது.
இதில் சுவாரசியம் என்னவென்றால், சுவாதிக்குத் திருமணத்தன்று தான் போட்டித் தேர்வு எழுதவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. போட்டித் தேர்வு குறித்து தனது கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் தெரிவித்து, தேர்வெழுத அனுமதி வாங்கினார்.
அதன் படி, திருமணம் முடிந்த கையோடு, மணமகள் சுவாதி திருமணக் கோலத்தில் போட்டித் தேர்வு எழுதுவதற்கு மடிகேரியில் உள்ள ஜூனியர் கல்லூரிக்குச் சென்று தேர்வெழுதினார். திருமணக் கோலத்தில் தேர்வெழுதிய சுவாதியை சக தேர்வாளர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
தேர்வெழுதி முடித்ததும் தனது கணவருடன் புறப்பட்டுச் சென்ற சுவாதி, “கடந்த 9 மாதங்களாகப் போட்டித் தேர்வுக்குத் தயாராகி வருகிறேன். திருமணத்தால் நான் பட்ட கஷ்டத்துக்குப் பலன் இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காகத் தேர்வு எழுத குடும்பத்தாரிடம் அனுமதி பெற்றேன்.
போட்டித் தேர்வுக்காகத் திருமண நிகழ்ச்சிகளை எளிமையாக, விரைவாக நடத்தி முடித்தோம். தேர்வைச் சிறப்பாக எழுதியுள்ளதால், நிச்சயம் வெற்றிபெறுவேன்” என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
Comments