ரோமப் பேரரசின் ஆண்டான் - அடிமை...  எரிமலை சாம்பலில் கண்டுபிடிப்பு!

0 3572
எரிமலையில் சிக்கி இறந்த இரண்டு மனிதர்களின் உடல் எச்சங்கள்

பண்டைய ரோமப் பேரரசின் பாம்பேய் ( Pompeii ) நகரத்தை அழித்த வெசுவியஸ் என்ற எரிமலையில் சிக்கி இறந்த இரண்டு மனிதர்களின் உடல் எச்சங்களைத் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த உடல்கள் அக்கால எஜமான் - அடிமையின் உடலாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கி.பி 79 ல் வெசுவியஸ் எரிமலை சீற்றத்தால் பாம்பேய் நகரம் மற்றும் அங்குக் குடியிருந்தவர்கள் அனைவரும் எரிமலை சாம்பல் மற்றும் லாவா குழம்பில் புதைந்தனர். தற்போது இந்த இடம், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு வளமான ஆதாரமாக மாறிவருகிறது. பண்டைய பாம்பேய் நகரின் மையத்திலிருந்து 700 மீட்டர் வடமேற்கே உள்ள சிவிடா கியுலியானாவில் ( Civita Giuliana ) அகழாய்வு செய்தபோது, எரிமலை சீற்றத்தில் சிக்கிய இரண்டு உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருவரும் எரிமலை சீற்றத்திலிருந்து தப்பிய ஒதுங்கியபோது சாம்பல் மற்றும் லாவா குழம்புகளால் அடித்துச் செல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அவர்களின் பற்கள் எலும்புகள் ஆகியவை அப்படியே பாதுகாப்பாக உள்ளன.

அதில் ஒருவர், செல்வந்தராகவும் உயர்ந்த அந்தஸ்தைக் கொண்டிருப்பவராக 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்கலாம் என்றும் அவரது கழுத்துக்குக் கீழே கம்பளியின் தடயங்கள் காணப்படுகின்றன. மற்றவர் ஓர் ஆடை மட்டும் அணிந்த 18 - 23 வயதுக்குட்பட்ட அடிமையாக இருக்கலாம் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அடிமையின் முதுகெலும்புகள் அதீத உழைப்பு காரணமாக பாதிக்கப்பட்ட வண்ணம் காணப்படுகின்றன.

இது குறித்து, பாம்பேய் தொல்பொருள் பூங்காவின் இயக்குநர் மாசிமோ ஒசன்னா, “இது வெப்ப அதிர்ச்சியால் ஏற்பட்ட மரணம். இறுகி இருக்கும் அவர்களின் கால்களும், கைகளும் அதை  நிரூபிக்கின்றன. எரிமலைச் சீற்றம் நடந்ததற்கான, மலைக்க வைக்கக்கூடிய மற்றும் அசாதாரணமான சாட்சியம் இது” என்று தெரிவித்துள்ளார்.

தற்போது, நேபிள்ஸ் என்கிற இடத்தில் உள்ள அகழ்வாராய்ச்சி தளத்தில், தொடர்ந்து தொல்பொருள் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. எரிமலையால் அழிந்து போன பாம்பேய் நகர இடிபாடுகள் 16 ம் நூற்றாண்டு வரை கண்டுபிடிக்கப்படாமல் இருந்தது. பிறகு, 1750 ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் மூளம் வெளிவருவது குறிப்பிடத்தக்கது..!  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments