சவுதி அரேபியா தலைமையில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு...காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பங்கேற்று உரை
ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்குபெற்ற பிரதமர் மோடி, பொருளாதார மீட்சி மற்றும் புவியை பாதுகாப்பதற்கு, வெளிப்படைத்தன்மையுடன் ஒன்றினைந்து செயல்பட உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சவுதி அரேபியா தலைமையில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின், 15-வது உச்சி மாநாடு காணொலி காட்சி வாயிலாக நேற்று தொடங்கியது. இதில், உறுப்பு நாடுகளான ரஷ்யா, சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளின் அதிபர்களும் பங்கேற்றனர்.
மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, கொரோனா தொற்று பாதிப்பு பெரும் திருப்பு முனையாக அமைந்துள்ளதாகக் கூறினார். மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகள், கொரோனா தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுப்பதை முன்னெடுத்துச் செல்லும் என வலியுறுத்தினார்.
திறமைக்கான பரந்த அமைப்பு, சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் தொழில்நுட்பம் சென்றடைவதை உறுதி செய்தல், நிர்வாக அமைப்புகளில் வெளிப்படைத் தன்மையுடன் இருப்பது மற்றும் பூமியை பாதுகாப்பாக கையாள்வது போன்றவை, ஜி 20 கூட்டமைப்பிற்கு புதிய உலகத்திற்கான அடித்தளத்தை அமைக்க உதவும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும், சுற்றுச்சூழலை உரிமையாளர்கள் போல் அல்லாமல் அறங்காவலர்கள் போன்று கையாள்வது, ஒரு முழுமையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு வழிவகுக்கும் என வலியுறுத்தினார்.
இதனிடையே, ஜி 20 அமைப்பின் தலைவர்களுடனான கலந்துரையாடல் மிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாக, பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Comments