பாதிவிலைக்கு பாப்கார்ன் நாதஸ் திருந்திட்டானாம்..! ஆஃபர் அறிவித்த தியேட்டர்கள்

0 16098
பாதிவிலைக்கு பாப்கார்ன் நாதஸ் திருந்திட்டானாம்..! ஆஃபர் அறிவித்த தியேட்டர்கள்

20 கிராம் சோளத்தை, பொறித்து 250 ரூபாய் பாப்கார்னாக விற்று கொள்ளை லாபம் பார்த்து வந்த சென்னை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வராததால், சினிமா டிக்கட் கட்டணத்தை குறைத்தும், பாதிவிலைக்கு பாப்கார்ன் தருவதாகவும் கூறி மக்களை கூவி அழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

500 கோடி ரூபாய் செலவழித்து எடுக்கப்பட்ட பிரமாண்ட படமாக இருந்தாலும் சரி, 5 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட மசாலா படமாக இருந்தாலும், சென்னை மால்களில் அமைந்துள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சினிமா டிக்கட் விலையும் சரி, பாப்கார்ன் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலையும் சரி எப்போதும் உச்சத்தில் தான் இருக்கும்..! அதாவது 20 கிராம் சோளத்தை பொறித்து 250 ரூபாய் பாப்கார்னாக விற்கும் அதிசயம் இங்குதான் நிகழ்ந்தது..!

உலகையே புரட்டிபோட்ட கொரோனா, திரையரங்கு உரிமையாளர்களையும் விட்டு வைக்கவில்லை. நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு கிடந்த திரையரங்குகளுக்கு கடந்த 10ந்தேதி தான் பாவ விமோச்சனம் கிடைத்தது. அதுவும் பாதி அளவு பார்வையாளர்களுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொரோனா அச்சம் முழுமையாக விலகாத காரணத்தாலும், திரையரங்குகளுக்கு ஜோடியாக செல்வோர் தனி தனியாகத்தான் அமரவேண்டும் என்ற விதி அமலில் இருப்பதாலும், பகல் நேரங்களில் தியேட்டர் பக்கம் ஒதுங்க கூட ஆள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்பு சினிமா டிக்கெட் கட்டணம், விளம்பரம் கட்டணம், பாப்கார்ன் வசூல் என பணத்தை குவித்த திரையரங்கு நிர்வாகத்தினர் காலை மற்றும் மதிய காட்சிகளை ரத்து செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு முன்பதிவு செய்து ரசிகர்கள் சென்ற காலம் போய்.., தற்போது பாதிவிலைக்கு பாப்கார்ன் தருகிறோம் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வாருங்கள் என்று டிவிட்டரில் கூவி அழைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர் மால்களில் உள்ள தியேட்டர் ஓனர்ஸ்..!

சென்னை ஓ.எம்.ஆர் சாலை நாவலூரில் பிகில் பட தயாரிப்பாளருக்கு சொந்தமான ஏ.ஜி.எஸ் சினிமாஸ் திரையரங்கில் டிக்கெட் விலை 125 ரூபாய் எனவும், திரையரங்கில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலையில் 50 சதவீதம் தள்ளுபடி, அதாவது பாதி விலைக்கு பாப்கார்ன் தருவதாகவும் அறிவித்துள்ளனர்..!

முன்னனி நடிகர்களின் படங்களை முதல்காட்சியை பார்க்க முண்டியடித்த ரசிகர்களிடம் ஒரு டிக்கெட்டுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் வரை வசூலித்த காசி டாக்கீசில் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்று அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது..!

போரூர் ஜிகே சினிமாசிலும் ஒரு டிக்கட் முன்பதிவு செய்தால் ஒரு டிக்கட் இலவசம் என்று அறிவித்துள்ளனர்..!

இந்த அறிவிப்பை வெளியிட்டதால், ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு திரையரங்கிற்கு படம் பார்க்க வருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்த நிலையில் திரையரங்கு நிர்வாகம் கடந்த காலங்களில் படம்பார்க்க சென்ற ரசிகர்களிடம் பாப்கார்னுக்கு வாங்கிய தொகையை ஒப்பிட்டு மீம்ஸ் வெளியிட்டு வருகின்றனர்.

திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட 50 சதவீத இருக்கைகளுக்கு கூட அமரஆள் இன்றி காற்று வாங்கும் நிலையில், இந்த அறிவிப்பை பார்த்த சிலர் நாதஸ் திருந்திட்டானாம்..! என்று ஒற்றை வரியில் கமெண்ட் அடித்து செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments