மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும்: முதலமைச்சர்
உள் ஒதுக்கீடு மூலம், மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மருத்துவ படிப்பில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டண சிரமத்தை தவிர்க்கும் வண்ணம், Post Matric கல்வி உதவித் தொகை மற்றும் இதர உதவித் தொகைத் திட்டங்கள் மூலம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவ மாணவர் சேர்க்கை ஆணை வழங்கும் விழாவில் தாம் அறிவித்ததாக, முதலமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில், உதவித்தொகைக்காக காத்திராமல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேர ஆணை பெற்றுள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை, அரசே நேரடியாக செலுத்தும் என்றும், முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதற்காக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டிருப்பதாக, முதலமைச்சர் கூறியுள்ளார்.
அரசின் உதவி முழுமையாக கிடைக்கும் எனத் தெரிந்த பின்பும், திமுக உதவுவதாக அறிவித்திருப்பது, ஒரு அரசியல் நாடகமே என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, 7 புள்ளி 5 சதவிகித உள் இட ஒதுக்கீடு மூலம், மருத்துவம் பயில, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும், அரசு பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை, திமுக ஏற்கும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நடப்புக் கல்வி ஆண்டில், மருத்துவப் படிப்புக்கான முழுக் கட்டணத்தையும், திமுக செலுத்தும் என்றும் மு.க.ஸ்டாலின், தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
Comments