மின்மாற்றியில் இருந்து செம்பு கம்பிகள் நூதன முறையில் திருட்டு

0 6491
செம்பு கம்பிகள் திருடப்பட்ட மின்மாற்றி

கோவை மாவட்டம் அரசூர் பகுதியில் மின்மாற்றியை கீழே தள்ளிவிட்டு சுமார் 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்பு கம்பிகள் திருடப்பட்டுள்ளது.

கோவை, அரசூர் பகுதியிலிருந்து பெத்தாம்பாளையம் செல்லும் பாதையில் கேரளா அரசு மின் வாரியத்துக்கு மின் கேபிள்களை விநியோகம் செய்யும் தனியார் தொழிற்சாலை உள்ளது.  இந்த தொழிற்சாலைக்கு தனியாக மின் பாதை அமைக்கப்பட்டு மின்மாற்றி மூலம் மின்சாரம் விநியோகிக்க பட்டிருந்தது. 

கடந்த ஆறு மாதங்களாக தொழிற்சாலை செயல்படாத நிலையில். ஆள் நடமாட்டம் இல்லாத இந்த பகுதியில் வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் அந்த மின்மாற்றிக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்து விட்டு, மின்மாற்றியை கீழே தள்ளி அதிலிருந்த விலை உயர்ந்த செம்பு கம்பிகளை திருடி சென்றுள்ளனர்.

image

வெள்ளிக்கிழமை காலை இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அரசூர் மின்சார வாரியத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய அதிகாரிகள் மின்மாற்றி கீழே தள்ளப்பட்டு அதிலிருந்த செம்பு கம்பிகள் திருடப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக அரசூர் மின்வாரிய இளநிலை பொறியாளர் சுரேஷ்குமார் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் பாதையில் உள்ள மின்மாற்றியில் செம்பு கம்பிகள் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை மின்மாற்றி பற்றி நன்கு தெரிந்தவர்களே செய்திருக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இதே போல அன்னூர், சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி மின் கம்பிகள் திருட்டு போவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments