வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை முன்கூட்டியே உருவானது - சென்னை வானிலை மையம்
தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் 25ஆம் தேதி தமிழகக் கடற்கரை - காரைக்கால் அருகே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகக் கரையை நெருங்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இது சென்னையில் இருந்து 1200 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலில் இருந்து 1100 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும், இது வரும் 25ஆம் தேதி தமிழகக் கடற்கரை - காரைக்கால் அருகே கரையை நெருங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வரும் 24, 25 ஆகிய தேதிகளில் மிகக் கனமழை பெய்யக் கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
Comments