அரியர் தேர்வில் ஆல் பாஸ் எனும் அறிவிப்பில் எந்த விதிமீறலும் இல்லை - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் விளக்கம்
அனைத்து பல்கலைக்கழகங்களுடன் ஆலோசித்தே அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஆல் பாஸ் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், இதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கிய தமிழக அரசின் அரசின் உத்தரவு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு விதிகளுக்கு முரணானது என யுசிஜி பதில் மனு தாக்கல் செய்திருந்தது.
நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் நிலுவையில் உள்ள இந்த வழக்கில், தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களுடன் கலந்தாலோசித்து குழு அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டதாக பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் எந்த ஒரு விதிமுறை மீறல் கிடையாது என்றும், மாணவர்களுக்கு சரிசமமான குறைந்தபட்ச மதிப்பெண் வழங்கப்படும், திருப்தி அடையாத மாணவர்கள் பின்னர் தேர்வுகளை எழுதி தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணாக்கர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கு முரணாக எந்த உத்தரவும் பிறப்பிககப்படல்லை என்றும் அந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகளுக்கு அதிகாரம் உள்ளதால் தான் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது எந்த வகையிலும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்காது என்றும், அரசின் இந்த உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவது ஆகாது என்றும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments