போலீசாரின் செல்போன் சிக்னலை வைத்து.. சுற்றலில் விட்ட கும்பல்..! காட்டிக் கொடுத்த கருப்பு ஆடுகள்

0 7477

சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை சுட்டுக் கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை ஆக்ரா போலீசாரின் உதவியுடன் சென்னை தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், இங்கிருந்து சென்ற தனிப்படை போலீசாரின் செல்போன் எண்களை, மகராஷ்டிரா காவல்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளின் உதவியுடன் பெற்று, போலீசாரின் பாணியிலேயே செல்போன் சிக்னல்களை கண்டறிந்து தப்பிச்சென்று தண்ணி காட்டிய பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை சவுகார்பேட்டையில் பைனான்சியர் தலில்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், அவரது மகன் ஷீத்தல் ஆகியோர் கடந்த 11-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். விசாரணையில், ஷீத்தல் என்பவரின் மனைவி ஜெயமாலாவும், அவரின் இரண்டு சகோதரர்களான கைலாஷ், விலாஷ், உறவினர்கள் 6 பேர் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டு முதலில் கைலாஷ், ரவீந்தரநாத்கர், விஜய் உத்தம் கமல் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தற்போது மூவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, தலைமறைவாக இருந்த ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரரும் வழக்கறிஞருமான விலாஷ், ராஜூ ஷிண்டே ஆகிய மூவரும் ஆக்ரா போலீசார் உதவியுடன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

இதில் வழக்கறிஞரான விலாஷுக்கு மகாராஷ்ட்ரா போலீசில் சில கருப்பு ஆடுகள் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகின்றது. அவர்கள் மூலமாக தங்களை தேடி வந்த தனிப்படை போலீசாரின் செல்போன் நம்பர்களை பெற்று, அதன் சிக்னலை வைத்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள், எங்கிருந்து எங்கு செல்கிறார்கள் போன்ற தகவலை வக்கீல் விலாஷ் ரகசியமாக பெற்று, போலீஸ் பிடியில் சிக்காமல் சாமர்த்தியமாக தப்பியதாக கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் வக்கீல் விலாஷ் கும்பலோ போலீஸ் வருவதை அறிந்து மகராஷ்டிர மாநிலம் சோலாப்பூர், புனே, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி என வெவ்வேறு இடங்களுக்கு செல்போன் எண்களை மாற்றிக் கொண்டே தப்பியதால், அவர்களை பிடிப்பது போலீசாருக்கு கூடுதல் சவாலாகவே இருந்தது.

விசாரணையில் விலாஷ், தனது நண்பர் மூலம் பல சிம்கார்டுகள் மற்றும் சாதாரண செல்போன்களை வாங்கியது தெரியவந்தது. இதன் பின் உஷாரான போலீசார் தங்கள் நகர்வையும், பிடிக்க செல்வதையும் முன்கூட்டியே அறிந்து 3 பேரும் தப்பி செல்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தனர்.

தமிழக காவல்துறையில் துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கை மெயில் அனுப்பினால் மட்டுமே செல்போன் நிறுவனங்கள் வாடிக்கையாளரின் சிக்னல் குறித்த தகவல்களை வழங்கி வருகின்றன, மற்ற மாநிலங்களில் காவல் நிலைய ஏட்டு நினைத்தாலே பெற்றுக் கொள்ளும் நிலை உள்ளது.

அந்தவகையில் விலாஷ் வக்கீல் என்பதால் மகராஷ்டிரா போலீசில் உள்ள தனக்கு நெருக்கமான சில கருப்பு ஆடுகளின் உதவியால் தனிப்படை போலீசாரின் செல்போன் சிக்னல்களை பெறுவது சாத்தியமானதாக கூறப்படுகின்றது. இதையடுத்து சாதுர்யமாக செயல்பட்ட சென்னை தனிப்படை காவல்துறையினர், அவர்கள் ஆக்ராவில் பதுங்கி இருக்கும் இடம் தெரிந்ததும், அவசரம் காட்டாமல், விரட்டிச் செல்வதை விடுத்து, ஆக்ரா போலீசாருக்கு விவரங்களை தெரிவித்து அவர்கள் மூலமாக மூவரையும் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

வக்கீல் விலாஷ் கும்பலிடம் இருந்து பத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், 5 சாதாரண செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆக்ரா போலீசார் தெரிவித்தனர். பிடிபட்ட 3 பேரையும் ஆக்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று சென்னைக்கு அழைத்து வர தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

புத்திசாலித்தனமாக யோசித்து 3 பேரையும் சாமர்த்தியமாக மடக்கி பிடிக்க திட்டம் வகுத்த தனிப்படை போலீசாருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இரவில் மாநில எல்லைகளிலும், நகர எல்லைகளிலும் தீவிர வாகன சோதனை அமலில் இருக்கும் நிலையில் இந்த கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளுடன் தமிழகத்திற்குள் இந்த கும்பல் எப்படி நுழைந்தது ? எப்படி தப்பிச்சென்றது ? என்பதையும் காவல்துறையினர் கண்டறிய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments