எல்லை நெடுகிலும் தொல்லை.. படைகளை குவிக்கிறது சீனா..!

0 5402

கிழக்கு லடாக் பகுதி ஆக்கிரமிப்பை கை விட்டு, விட்டு, இந்தியாவுடனான எல்லை நெடுகிலும் படைகளை சீனா பலப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய எல்லை நெடுகிலும் ஆயுதங்களை குவிப்பதோடு, கட்டுமான பணிகளையும் சீனா துரிதப்படுத்தி உள்ளது.

கிழக்கு லடாக்கில் ஆக்கிரமிக்க சீனா மேற்கொண்ட முயற்சிகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து உள்ளதோடு, தனது வலுவை அதிகரித்தும் உள்ளது. மேலும் பிற நாடுகளும் சீனாவின் ஆக்கிரமிக்கும் எண்ணத்தை அறிந்து கொண்டதோடு, எல்லை நிலவரத்தை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளன. இதனால் தனது ஆக்கிரமிப்பு திட்டத்தை சீனா மாற்றிக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள கவுரிக் கணவாய் முதல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பிஷ் டெயில் ஒன்று, இரண்டு பிராந்தியம் வரை சீனாவின் படை குவிப்பு நடைபெறுவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

கவுரிக் கணவாயை அடுத்த சீனா பிராந்தியத்தில் உள்ள சிரூப் கிராமம் வரை அந்நாட்டு ராணுவம் சாலை அமைத்துள்ளதை இந்திய ராணுவம் கண்டறிந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநில எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பரகோட்டி சமவெளியில் வீரர்கள் தங்குமிடத்தை சீன அமைத்துள்ளது. இதே போல லடாக் எல்லையில் இருந்து 82 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கார் குன்சா விமானப்படைத்தளத்தை பலப்படுத்தி உள்ள சீனா, அதனை படைகள் இறக்கி ஏற்றும் தளமாக மாற்றி உள்ளது.

கனரக ஆயுதங்களை அங்கிருந்தே எல்லைக்கு கொண்டு செல்லும் பணியிலும் சீன ஈடுபட்டுள்ளது. அருணாச்சல பிரதேச எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நயாங்லு படைத்தளத்தை மின்னணு போர் தளமாக சீனா மாற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு நான்கு எலக்ட்ரானிக் ஜாமர்களை சீன ராணுவம் நிறுவி உள்ளது.

1962 ஆம் ஆண்டில் யுத்த முகாமாக இருந்த அந்த இடத்தில் இருந்து இந்திய ராணுவ தகவல் தொடர்பை முடக்க சீன செயல்திட்டம் தீட்டி உள்ளதாக இந்திய உளவுத்துறை கூறியுள்ளது. இதே போன்று சிக்கிம், அருணாச்சல பிரதேசம் மற்றும் கிழக்கு லாடக்கை ஒட்டி கல்வான் பள்ளத்தாக்கு வரையிலான எல்லையை ஒட்டிய இடங்களில் சீன ராணுவம், மற்றும் உளவுப்படையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதையும் இந்திய ராணுவம் உறுதி செய்தி உள்ளது.

சிக்கிம் மாநில எல்லையில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செங்மூ என்ற இடத்தில் தகவல் தொடர்பு கோபுரங்களையும் சீன ராணுவம் புதிதாக அமைத்துள்ளது. இதே போன்று எல்லைக்கு அருகே உள்ள காஷ்கர் விமானப்படை தளத்தில் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவும் சாதனங்களை சீனா நிறுவி உள்ளதையும் இந்திய ராணுவம் கண்டறிந்துள்ளது.

சீனா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பிராந்தியத்தை கண்காணிக்க காஷ்கர், ஹோடன் படைத்தளத்தை சீனா பயன்படுத்தி வரும் நிலையில் அங்கு படைகள் களமிறக்க உதவும் கனரக விமான போக்குவரத்து சமீபகாலமாக அதிகரித்து உள்ளதை இந்திய ராணுவம் கண்டறிந்து உள்ளது. காரகோரம் கணவாயில் இருந்து 112 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காங்சிவார் படைதளத்தில் புதிதாக படைகளை சீன குவித்துள்ளது.

சிக்கிம் மாநில எல்லைக்கு அருகே உள்ள ஹோப்பிங் விமான படைத்தளத்தில் ஆளில்லா ராணுவ விமானங்களை சீனா அதிக அளவில் கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. லாசா படைத்தளத்தில் ராணுவ தளவாடங்கள் வந்திறங்குவதை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் கிழக்கு லடாக்கை விட்டு விட்டு, மற்ற எல்லை பகுதியில் ஊடுருவ சீனா திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவம் கருதுகிறது. இதையடுத்து எல்லை நெடுகிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை இந்திய ராணுவமும் பலப்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments