போலீசாரின் செல்போன் சிக்னலையே கண்காணித்து தப்பி வந்த கும்பல்
தலைமறைவு குற்றவாளிகளை அவர்களது செல்போன் சிக்னலை கண்காணித்து பிடிப்பது காவல் துறையின் ஒரு வழக்கம். இந்த பாணியை பின்பற்றி சவுக்கார்பேட்டை கொலை வழக்கு குற்றவாளிகள், தனிப்படை போலீசாரின் செல்போன் சிக்னலை தெரிந்து கொண்டு தப்பி வந்த போதும் சாதுர்யமாக அவர்களை கைது செய்தது பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை சவுகார்பேட்டையில் பைனான்சியர் தலில்சந்த், அவரது மனைவி புஷ்பா பாய், அவரது மகன் ஷீத்தல் ஆகியோர் கடந்த 11-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
விசாரணையில், கொல்லப்பட்ட ஷீத்தலின் மனைவி ஜெயமாலாவும், அவரின் இரண்டு சகோதரர்கள் கைலாஷ், விலாஷ் உட்பட உறவினர்கள் 6 பேர் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டு முதலில் கைலாஷ், ரவீந்தரநாத்கர், விஜய் உத்தம் கமல் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தற்போது மூவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, தலைமறைவாக இருந்த ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரர் விலாஷ், ராஜூ ஷிண்டே ஆகிய மூவரும் டெல்லி ஆக்ரா போலீசார் உதவியுடன் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சோலாப்பூர், புனே, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி என வெவ்வேறு இடங்களுக்கு செல்போன் எண்களை மாற்றி தப்பியதால், அவர்களை பிடிப்பது போலீசாருக்கு சவாலாகவே இருந்தது. இது பற்றி விசாரித்த போது, விலாஷின் நண்பர் மூலம் பல சிம்கார்டுகள் மற்றும் சாதாரண செல்போன்கள் வாங்கியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதன் பின் உஷாரான போலீசார் தங்கள் நகர்வையும், பிடிக்க வருவதையும் முன்கூட்டியே அறிந்து 3 பேரும் தப்பி செல்கிறார்கள் என்பதை அறிந்தனர்.
அதன் பின் விசாரணை செய்த போது தான் விலாஷ் வழக்கறிஞர் என்பதால், தனிப்படை போலீசாரின் செல்போன் எண்களை, அவர்கள் பாணியிலேயே கண்டுபிடித்து, எங்கு செல்கிறார்கள் என நண்பர்கள் மூலம் சிக்னல்களை வைத்து கண்காணித்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.
செல்போன் நிறுவனங்கள் காவல்துறையினருக்கு மட்டுமே சிக்னல் குறித்த தகவல்களை வழங்க முடியும் என்றுள்ள நிலையில், விலாஷ்க்கு அந்த தகவல் எப்படி கிடைத்தது என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் வேறு போலீசார் அவருக்கு உதவி இருக்கிறார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது. இதையடுத்து சாதுர்யமாக செயல்பட்டு, ஆக்ரா போலீசார் உதவியுடன் சுற்றி வளைத்து மூவரையும் சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து பத்துக்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஆக்ரா போலீசார் தெரிவித்தனர்.
பிடிபட்ட 3 பேரையும் ஆக்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் பெற்று சென்னை அழைத்து வர முடிவு செய்துள்ளனர்.
குற்றவாளிகளை பிடிக்க போலீசார் பயன்படுத்தும்,அதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வழக்கறிஞர் விலாஷ் ,ஜெயமாலா, ராஜூ சிண்டே ஆகிய 3 பேரும் தப்பித்தாலும், அதையும் தாண்டி புத்திசாலித்தனமாக யோசித்து 3 பேரை மடக்கி பிடித்த தனிப்படை போலீசாருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Comments