மைக்ரோவேவ் ஆயுத தாக்குதல்.! பிதற்றும் சீனா - மறுக்கும் இந்தியா.!
லடாக்கில், கட்டுப்பாட்டுக் எல்லைப் பகுதியில், இந்திய துருப்புகள் மீது, மைக்ரோவேவ் ஆயுதங்கள் எனப்படும், நுண்ணலை ஆயுதங்களை கொண்டு தாக்கியதாக, சீனா பிதற்றி வரும் நிலையில், அது பொய்ச் செய்தி என, இந்திய ராணுவத் தரப்பு, திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.
உணவுத் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் மைக்ரோவேவ் ஓவனில், உணவு பொருளை ஊருடுவி, அதிஉயர் அதிர்வெண் கொண்ட நுண்ணலைகள் வெப்பத்தை ஏற்படுத்துவதுபோலவே, இந்த மைக்ரோவேவ் ஆயுதங்களும், உடலில், வெப்ப மாறுபாட்டை உருவாக்கி திக்கு முக்காட வைத்து, மனிதர்களை முடக்கிவிடும் எனக் கூறப்படுகிறது.
"எலக்ட்ரோ மேக்னடிக்" முறையில் செயல்படும் இந்த மைக்ரோவேவ் ஆயுதங்கள், மனிதத் தோலின் அடிப்பகுதியில் இருக்கும் நீர்த் துகள்களை சூடாக்கும். இதனால், கடுமையான உஷ்ணம் உடலை தாக்குவதால் அந்தப் பகுதியில் மக்களால் தொடர்ந்து இருக்க முடியாத சூழல் ஏற்படும். சுமார் 1 கி.மீ. தொலைவு வரையில் உள்ள மக்களை இந்த ஆயுதங்களால் விரட்ட முடியும்.
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட மிகச்சில நாடுகளில் உள்ள இந்த நுண்ணலை ஆயுதங்கள், ஆர்ப்பாட்டங்களில் வன்முறை வெடித்து கலவரம் மூளும்போது, போராட்டக்காரர்களை விரட்டியடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. ராணுவத்தின் ரகசியத் தாக்குதலுக்கும் பயன்படுகிறது.
இவ்வாறு, சீனாவில், கடந்த 2014ல் அறிமுகம் செய்யப்பட்ட நுண்ணலை ஆயுதங்களை கொண்டு, லடாக் எல்லையில் உள்ள இந்திய வீரர்களை, கடந்த ஆகஸ்ட் மாதம், சீன ராணுவம் தாக்கியதாக, பிரிட்டனிலிருந்து வெளிவரும் "தி டைம்ஸ்" இதழுக்குப் பேட்டியளித்த, சீன பாதுகாப்புத்துறை வல்லுநர் ஜின் கான்ராங் (Jin Canrong) என்பவர் தெரிவித்திருந்தார்.
பீரங்கி குண்டுகள், தோட்டாக்கள் பயன்படுத்தப்படாத, ’நான்-கான்டாக்ட் வார் ஃபேர்’ என்ற யுத்த த்தின் அடிப்படையில், நுண்ணலை ஆயுதங்களை பயன்படுத்தி சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால், இந்திய வீரர்கள் வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகி, உடல்நலம் பாதிக்கப்பட்டு, தாங்கள் இருந்த பகுதியிலிருந்து, பின்வாங்கியதாகவும், சீன பாதுகாப்பு வல்லுநர் கூறியிருந்தார்.
இந்த கூற்றை, இந்திய ராணுவத் தரப்பும், பாதுகாப்புத்துறை செயல்பாடுகளை நன்கறிந்தவர்களும், திட்டவட்டமாக மறுக்கின்றனர். கிடைமட்ட அளவில், அதவாது தரைதளத்தில், நுண்ணலை ஆயுதங்களை பயன்படுத்த முடியுமென்றாலும், இமயமலைச் சாரலில், பல அடி உயரம் உள்ள பகுதியில், இந்திய வீரர்கள் மீது பயன்படுத்தப்படும் போது, அது பெரியளவில் பயன்தாரது என்றும், இந்திய பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Comments