சென்னையில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு- விமானி தகுந்த நேரத்தில் கண்டுப்பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
சென்னையில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக்கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுப்பிடித்ததால், விமானத்தில் இருந்த 161 பேரும் உயிர் தப்பினர்.
வந்தே பாரதம் திட்டத்தின் கீழ் இன்று காலை 147 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் விமானம் சுமார் 7.25 மணிக்கு புறப்பட்டது. ஓடுபாதையில் விமானம் ஓடத் துவங்கியதும், தொழில்நுட்பக் கோளாறை கண்டுபிடித்த விமானி, ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தி விட்டு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து விமானம் இழுவை வாகனங்கள் மூலம் இழுத்து கொண்டு வரப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வு அறைகளில் தங்கவைக்கப்பட்டனர்.
விமானத்தை பழுது பார்க்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுப்பட்டாலும் கோளாறை உடனடியாக சரி செய்ய இயலவில்லை. இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் ஏற்கனவே நின்ற பிரிட்டீஷ் ஏர்லைன்சின் மாற்று விமானத்தில் பயணிகளை அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டது.
Comments