18 - ஆம் தேதி மனு... 20 -ஆம் தேதி அரசு வேலை - இன்ப அதிர்ச்சியில் மாற்றுத்திறனாளி
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவருக்கு, கோரிக்கை மனு அளித்த மூன்று நாள்களில் பணி நியமன ஆணை வழங்கி நடவடிக்கை எடுத்துள்ளார், தமிழக முதல்வர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பொதுமக்கள் நேரடியாகக் கொடுக்கும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில், நவம்பர் 12 - ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் கோரிக்கை மனு அளித்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஓரிரு மணி நேரத்தில் பணி ஆணை வழங்கி அதிரடி நடவடிக்கை எடுத்தார். அந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் கருணை அடிப்படையில் பணி ஆணை வழங்கக் கோரிக்கை மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு மூன்று நாள்களில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 18 - ம் தேதி, சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தார். அப்போது, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சாதிக் பாஷா என்பவர் கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரிக்கை மனு அளித்தார். அவரது கோரிக்கையைப் பரிசீலித்த முதல்வர் பணி ஆணை வழங்க ஆணையிட்டார். குமாரபாளையம் நகராட்சியில் கம்யூட்டர் ஆப்பரேட்டடர் பணிக்கான ஆணையை மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று ((20.11.2020)) வழங்கினார்.
கோரிக்கை மனு கொடுத்த மூன்று நாள்களில் பணி நியமன ஆணை வழங்கிய முதல்வருக்கு சாதிக் பாஷா நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
Comments