கிணற்றில் விழுந்த யானை... நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு

0 6916
கிணற்றில் இருந்து முதலில் தூக்கிய போது கயிற்றில் இருந்து நழுவி யானை கீழே விழுந்தது

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த யானை 14 மணி நேர போராட்டத்திற்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி ஏலகுண்டூர் கிராமத்திற்கு இரவு நேரத்தில் உணவு தேடி வந்த 12 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை, வெங்கடாசலம் என்பவரின் சுற்றுச் சுவர் இல்லாமல் இருந்த விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்தது. மொத்தம் 52 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் 22 அடிக்கு உறைகிணறும் அதில் 5 அடிக்கு தண்ணீரும் இருந்தது. அதிகாலையில் கிணற்றில் இருந்து யானை பிளிறும் சத்தம் கேட்டு கிராம மக்கள் சென்று பார்த்து, வனத்துறைக்கு தகவல் அளித்தனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் 20க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் சென்று யானையை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். உறை கிணற்றில் உள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றி, 2 கிரேன் இயந்திரம் மூலம் யானையை மீட்கும் பணி தொடர்ந்தது.

யானையை பாதுகாப்பாக மீட்பதற்காக இரண்டு மயக்க ஊசிகள் செலுத்தப்பட்டன. கிணற்றில் இருந்து முதலில் தூக்கிய போது கயிற்றில் இருந்து நழுவி யானை கீழே விழுந்தது. கிணற்றில் பக்கவாட்டில் உள்ள இடத்தில் விழுந்த யானையை மீண்டும் கயிறு கட்டி தூக்கினர்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, சம்பவ இடத்திற்கு சென்று யானை மீட்பு பணியை துரிதப்படுத்தினார். இரவு 8.20 மணியளவில் 14 மணி நேர போராட்டத்திற்கு பின் யானை உயிருடன் மீட்கப்பட்டதும், அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

2 மயக்க ஊசிகள் போடப்பட்டு இருந்ததால் யானையின் உடல் பகுதி முழுவதும் தண்ணீரை பீய்ச்சி அடித்து வனத்துறையினர் மயக்கத்தை தெளிய வைத்தனர். பின்னர் கயிறு மூலம் யானை கட்டப்பட்டது. கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்த பின், பஞ்சப்பள்ளி காட்டில் யானையை விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கார்த்திகா தெரிவித்தார்.

யானை மீட்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாவட்ட வனத்துறை அதிகாரி பிரபு, இது போன்ற சம்பவங்கள் இனி நிகழ்வதை தடுக்க, விவசாய தோட்டங்களில் உள்ள கிணறுகளுக்கு கட்டாயம் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்று அறிவிக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments