திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணாவிற்கு ஐசியுவில் தொடர்ந்து சிகிச்சை... உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல்

0 5229
அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, ஆலங்குளம் திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணாவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை உட்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, ஆலங்குளம் திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணாவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, திமுக பூத் கமிட்டி கூட்டத்தில் அவர் அவமதிக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் திமுக எம்எல்ஏவாக இருப்பவர் பூங்கோதை ஆலடி அருணா. அண்மையில் தென்காசி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில், பெயரளவுக்கு பங்கேற்ற பூங்கோதை, அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கடையத்தில் நடந்த திமுக பூத் கமிட்டி கூட்டத்தில் மாவட்ட செயலாளருக்கும் பூங்கோதைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் நிர்வாகிகள் சிலர் பூங்கோதையை அவதூறாக பேசியதாகவும், அவர் உடனே கையெடுத்து கும்பிட்டபடி வெளியேறியதாகவும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

பின்னர் கூட்டம் நடைபெற்ற இடத்தில் தரையில் அமர்ந்த பூங்கோதை தனது எதிர்ப்பை தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது சிவ.பத்மநாபன், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சிவனு பாண்டியன் உள்ளிட்டோருக்கும் பூங்கோதைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேண்டும் என்றே வம்பு வளர்க்கிறீர்களா, வெளியே போய்விட்டு மீண்டும் உள்ளே ஏன் வந்தீர்கள் என ஒரு ஆண் குரல் ஆவேசமாகக் கேட்பதும், காலில் கூட விழுகிறேன், ஆளை விடுங்கள் என்பது போல, முன்னால் நிற்பவர்களின் காலைத் தொட்டு தொட்டு பூங்கோதை கைகூப்பும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. 

இந்த பின்னணியில்தான், அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை பூங்கோதை உட்கொண்டதாகவும், நெல்லை ஜங்ஷன் ஷிஃபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து, ஷிஃபா மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்எல்ஏவும் டாக்டருமான பூங்கோதை, சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனை கொண்டுவரப்பட்டதாகவும், சிகிச்சைக்குப் பிறகு கண்விழித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூங்கோதையின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அதேசமயம் பூங்கோதைக்கு ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதாகவும், மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments