சென்னை குடிநீர் தேவைக்காக 5- வது புதிய நீர்த் தேக்கம், நவ. 21 -ல் மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது

0 6724

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவுத்திட்டமான கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்தின் பணிகள் முற்றிலும் நிறைவடைந்துள்ளது.

சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவதற்காக பூண்டி நீர்த்தேக்கம், புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகள் பயன்பாட்டில் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு 14 டி.எம்.சி., தண்ணீரை சேகரித்து வைக்க முடியும். .ஆந்திராவின் சாய் கங்கை திட்டம் மூலம், கிருஷ்ணா நதி நீர், பூண்டி நீர்த்தேக்கத்துக்கு கொண்டு வரப்பட்டு சென்னை மக்கள் பயன்பாட்டுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மழை காலங்களில் கிடைக்கும் கிருஷ்ணா நதி நீரை வீணாக கடலில் கலக்காமல் சேமித்து வைக்க தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டார். அப்படி உருவானதுதான் கண்ணன்கோட்டை நீர்தேக்கம்.

கும்முடிப்பூண்டி அருகேயுள்ள கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை பகுதியில், 380 கோடி மதிப்பீட்டில் 1,485 ஏக்கர் பரப்பில், நீர்த்தேக்கம் திட்டமிடப்பட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பணி தொடங்கியது. நிலத்தை கையகப்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்ததால், நீர்தேக்கம் அமைக்கும் பணியில் சுணக்கம் ஏற்பட்டாலும், தற்போது பணிகள் முற்றிலும் நிறைவடைந்துள்ளன. நீர்தேக்கத்தை சுற்றி 7.15 கிலோ மீட்டர் தூரம் வரை கரைகள் அமைக்கும் பணிகள் முடிந்து விட்டன.

தற்போது, மழை காரணமாக கண்ணன்கோட்டை நீர் தேக்கம் நீர் நிறைந்து கடல் போல காட்சியளிக்கிறது. கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சத்தியவேடு காட்டில் பாயும் ஓடைகளின் தண்ணீரை கண்ணன்கோட்டை நீர் தேக்கத்தில் சேமித்து வைக்க உள்ளனர்.சத்தியவேடு காட்டில் உள்ள ஓடைகளின் தண்ணீரை இங்கு கொண்டு வரும் விதமாக கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments