உறை கிணற்றில் தவறி விழுந்த யானை... 7 மணி நேரமாக மீட்கும் பணி தீவிரம்
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உறைக்கிணற்றில் தவறி விழுந்த 12 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானையை உயிருடன் மீட்கும் பணி 7 மணி நேரத்தை தாண்டியும் நீடித்து வருகின்றது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி காப்பு காட்டில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் உணவு தேடி பஞ்சப்பள்ளி ஏலகுண்டூர் கிராமத்திற்கு வந்த 12 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை வெங்கடாசலம் என்பவரின் விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளது.
மொத்தமாக 52 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் 22 அடிக்கு உறைகிணறு உள்ளது. அதிகாலையில் கிணற்றில் இருந்து யானை பிளிறும் சத்தம் கேட்டு கிராம மக்கள் சென்று பார்த்து, வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
முதற்கட்டமாக சம்பவ இடத்திற்கு வந்த பாலக்கோடு வனத்துறையினர் கயிறு கட்டி யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அது தோல்வியில் முடியவே, பாலக்கோடு வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, உறை கிணற்றில் உள்ள தண்ணீரை மின் மோட்டார் மூலம் வெளியேற்றி, 2 கிரேன் இயந்திரம் மூலம் யானை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கிணற்றில் இருந்து யானையை பாதுகாப்பாக மீட்க சாய்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. யானையை மீட்கப்பட்டவுடன் சிகிச்சை அளிக்க மருத்துவ குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
யானை கிணற்றுக்குள் விழுந்த செய்தி அறிந்து அங்கு சுமார் 500-க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர்.
இதனிடையே, கிணற்றுக்குள் விழுந்த யானையை மீட்கும் பணியில் அடுத்த கட்ட நடவடிக்கையாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகளில் தீயணைப்புத்துறையினரும், வனத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments