தருமபுரி : 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து யானை உயிருக்கு போராட்டம்!
தருமபுரி அருகே 30 அடி ஆழ கிணற்றில் விழுந்துள்ள யானையை மீட்க வனத்துறையினர் போராடி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சபள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணீர் இல்லாத கிணற்றில் இன்று அதிகாலையில் பெண் யானை ஒன்று தவறி விழுந்தது.
யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது , 30 அடி ஆழ கிணற்றுக்குள் யானை உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டனர்.
உடனடியாக, இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் யானையை மீட்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கிணறு குறுகியதாக இருப்பதால், யானையை மீட்பது சவாலாக உள்ளது.
எனினும், யானையை விரைவில் மீட்டு விடலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். கிணற்றுக்குள் விழுந்த யானைக்கு 12 வயது இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. யானை விழுந்த கிணற்றை சுற்றிலும் பொதுமக்கள் திரளாக திரண்டுள்ளனர்.
Comments