மருத்துவ கலந்தாய்வு... முதலமைச்சர் பெருமிதம்
கடந்த ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 6 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்த நிலையில், உள்ஒதுக்கீட்டின் காரணமாக நடப்பாண்டில் 313 பேர் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என கூறினார். நீட் தேர்வை எதிர்க்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் எனவும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாகவே நீட் தேர்வு நடத்தப்படுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதன் மூலம், 313 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக கூறினார். மத்திய அரசின் மருத்துவகல்லூரிகளில் நீட் தேர்வு இல்லையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கியதில் உண்மையில் கிராமத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் தான் பெருமை கொள்வதாக பதிலளித்தார்.
முன்னதாக, நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற, முதல் 18 மாணவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேர்க்கை ஆணையை வழங்கினார். அப்போது, அரசு வழங்கிய 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டின் காரணமாக, தங்களது பிள்ளைகளின் மருத்துவக் கனவு நிறைவேறியதாக, பெற்றோர்கள் முதலமைச்சருக்கு கண் கலங்கி நன்றி தெரிவித்தனர்.
Comments