விநாயகருக்காக வீதியில் அமர்ந்த திமுக பெண் எம்.எல்.ஏ..! கோவில் இடிப்பை தடுத்தார்
தூத்துக்குடியில் சாலையோரம் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் கோவிலை அகற்ற முயன்ற மாநகராட்சியை எதிர்த்து, பாரதீய ஜனதாவினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு கோவில் இடிக்கப்படுவதை தடுத்து நிறுத்தினார்.
தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனி 80 அடி சாலையில் நீண்ட காலமாக சக்தி விநாயகர் கோவில் ஒன்று உள்ளது.
இந்த பகுதியில் கழிவுநீர் ஓடை அமைப்பதற்காக, தனியார் நிலத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலை ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி அதனை இடித்து அகற்ற தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் நடவடிக்கையில் இறங்கினார்.
இதனை கண்டித்து விநாயகர் கோவில் நிர்வாகத்தினரும், பாரதீய ஜனதா கட்சியினரும் செவ்வாய்கிழமை இரவு போராட்டத்தில் குதித்தனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தூத்துக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ கீதாஜீவனும் போராட்டத்தில் குதித்ததால் கோவில் இடிக்கும் முயற்சியை கைவிடுவதாக கூறி அதிகாரிகள் திரும்பிச்சென்றனர்
இந்த நிலையில் புதன்கிழமை காலை கொடுத்த வாக்குறுதியை மீறி விநாயகர் கோவிலை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் அவசர அவசரமாக பொக்லைன் எந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். பாதுகாப்புக்கு காவல்துறையினரையும் அழைத்து வந்திருந்தனர்.
இதனை அறிந்து விரைந்து வந்த திமுக எம்.எல்.ஏ கீதாஜீவன், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், ஆகியோருடன், திமுக மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரும், அப்பகுதி மக்களும் ஸ்டேட் பேங்க் காலனி 80 அடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி கணேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கீதா ஜீவன் எம்எல்ஏ உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கோவிலுக்கு எந்த ஒரு சேதமுமின்றி கழிவு நீரோடை அமைக்கப்படும் என்றும், வாய்க்கால் அமைக்கும்போது கோவிலில் ஏதும் சேதம் ஏற்பட்டால் அதையும் சரி செய்து கொடுப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அரசியல் களத்திலும், கொள்கையிலும் பா.ஜ.கவும், திமுகவும்எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும், கோவில் பிரச்சனை என்றதும் மதத்தை கடந்து மக்களின் நம்பிக்கையை மதித்து வீதியில் இறங்கி போராடி விநாயகர் கோவில் இடிப்பதை தடுத்து நிறுத்திய திமுக எம்.எல்.ஏ கீதாஜீவனுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
Comments