பாசமிகு மகனுக்கு மெழுகுச்சிலை... மதுரையில் தந்தை உருக்கம்!
உடல்நலக்குறைவால் உயிரிழந்த மகனுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாளில் 6 அடிக்கு மெழுகு சிலை அமைத்துள்ளார் மதுரையைச் சேர்ந்த பாசக்கார தந்தை ஒருவர்.
மதுரை, அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் - சரஸ்வதி தம்பதியருக்கு இரண்டு மகள்களுக்கு பிறகு, மூன்றாவது மகனாகப் பிறந்தவர் மாரிகணேஷ். கடைக் குட்டியாகப் பிறந்த மாரிகணேஷ்க்கு 10 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி மகன் மற்றும் மகள் என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சிறுவயது முதலே பெற்றோர் மற்றும் சகோதரிகள் இருவரும் மாரிகணேஷ் மீது அதீத அன்பு செலுத்தி வளர்த்துள்ளனர். மாரி கணேஷும் தம் குடும்பத்தார் மீது பாசத்துடன் இருந்துள்ளார். இளமையில் புல்லட் பைக் ரேசராக இருந்த மாரிகணேஷ் பல போட்டிகளில் முதலிடம் பிடித்து பதக்கங்கள் மற்றும் விருதுகளைப் பெற்றுள்ளார். இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிகணேஷ் 2019, நவம்பர் மாதம் 18 ஆம் தேதியில் உயிரிழந்தார்.
இந்த நிலையில், மாரிகணேஷின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரது தந்தை முருகேசன் சுமார் 6 லட்சம் செலவில் மாரிகணேஷ்க்கு தத்ரூபமாக மெழுகு சிலை செய்துள்ளார். மாரிகணேஷின் உருவ சிலையைக் காணவும், முதலாமாண்டு நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்தவும் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
உடல்நலக் குறைவால் இறந்த தனது மகனுக்கு சுமார் 6 லட்சம் செலவில், 6 அடிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செலுத்திய தந்தையின் செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments